பெண்கள் தினசரி காலை பயன்படுத்தும் மேக்கப் பொருட்களில் பிரைமர், ஃபவுன்டேஷன், கன்சீலர், பவுடர், அன்டர்-ஐ ப்ராடக்ட்ஸ் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் இந்த தயாரிப்புகள் நீண்ட காலத்திற்கு சருமத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் அல்லது விளைவுகளை பற்றி பலரும் யோசிப்பதில்லை. நீங்களும் இதில் ஒருவரா.!மேக்-அப் பொருட்களை தினசரி பயன்படுத்தும் போது அவை சில நேரங்களில் சருமத்தை மோசமாக பாதிக்கின்றன. இதற்கு காரணம் அதில் அடங்கி இருக்கும் கெமிக்கல்கள். எனவே மேக்கப் போடாமலே அழகான லுக்கை பெறுவது எப்படி என்பதற்கான எளிய 10 இயற்கை வழிகளை இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
ஆரோக்கியமான உணவு : உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்வது இயற்கையான முறையில் பளபளப்பான சருமத்தை அடைவதற்கான முக்கிய வழியாகும். ஆரோக்கியமான சருமத்தை அடைய தினசரி உணவில் ஊட்டச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதை உறுதிப்படுத்தி கொண்டால் உங்களக்கு பெரிதாக மேக்கப் தேவை இருக்காது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் : தினசரி 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகுந்த நன்மைகளை தரும். அதிகம் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுகிறது. எனவே உங்கள் சருமம் உயிரோட்டமாகவும் இருக்கும். இது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும்,சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும் உதவுகிறது.
நிம்மதியான உறக்கம் : ஆரோக்கியமான உணவோடு சேர்த்து நல்ல இரவு தூக்கம் சரும அழகில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தூங்கும் போது தான் நம் உடல் தன்னைத் தானே பழுது பார்த்து கொள்கிறது. எனவே அதற்கு வாய்ப்பளித்து தினமும் 6 - 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் தூங்குவது, காலை விழித்தெழும் போது நாள் முழுவதும் நீங்கள் அழகாக தோற்றமளிக்க உதவுகிறது.
மூலப்பொருட்களின் மீது கவனம் : நீங்கள் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்களில் அடங்கி இருக்கும் மூலப்பொருட்களின் மீது கவனம் செலுத்துங்கள். சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய அல்லது உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய பாராபென்ஸ், பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் சல்ஃபேட்ஸ் சேர்க்கப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்தாதீர்கள். இயற்கை மூலப்பொருட்கள் அடங்கிய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
வொர்கவுட்ஸ் : வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 - 4 மணிநேரங்கள் வொர்கவுட்ஸில் ஈடுபடுவது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல சருமம் ஆரோக்கியத்திலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினசரி உடல்செயல்பாடுகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தை குறைத்து தோற்ற பொலிவை மேம்படுத்துகிறது.
உங்களுக்கான சரும பராமரிப்பு நடைமுறை : உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உங்களது சருமத்திற்கு ஏற்ற சரும பராமரிப்பு முறையை கண்டறிந்து பின்பற்ற வேண்டும். உங்களது ஸ்கின் டைப்பை பொறுத்து பராமரிப்பு நடைமுறையில் தயாரிப்புகளை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். கடுமையான கெமிக்கல்கள் இல்லா சரும பராமரிப்புப் பொருட்களை தேர்ந்தெடுக்கவும். தூங்க செல்லும் முன் சருமத்தை போதுமான அளவு சுத்தம் செய்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
எக்ஸ்ஃபோலியேஷன் : சரும பராமரிப்பு நடைமுறையின் ஒரு முக்கிய அங்கமாக எக்ஸ்ஃபோலியேஷன் இருக்கிறது. நம் தோல் எப்போதும் மேற்பரப்பில் இருந்து இறந்த செல்களை உதிர்கிறது.இது புதிய மற்றும் ஆரோக்கிய செல்களுடன் சருமம் தன்னை புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. எனவே மைல்ட்டான எக்ஸ்ஃபோலியேட்டரை பயன்படுத்துவதன் மூலம் இந்த இயற்கை செயல்முறைக்கு நீங்களும் உதவலாம்.
சன்ஸ்க்ரீன் : கோடை காலத்தில் மட்டுமே சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. முன்கூட்டிய வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்துவதில் சூரியனிலிருந்து வெளிப்படும் UVA, UVB மற்றும் UVC கதிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே ஆண்டின் அனைத்து சீசன்களிலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதன் மூலம் இந்த பாதிப்புகளை குறைக்கலாம். சன்ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்துவது டார்க் ஸ்பாட்ஸ் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை தடுக்கிறது.
கிரீன் டீ : கிரீன் டீ குடிப்பதும், அதை மேற்பூச்சாக பயன்படுத்துவதும் சருமத்திற்கு நன்மைகளைத் தரும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. கிரீன் டீ சருமம் இளமையாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் சரும புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பியுள்ள கிரீன் டீ-யில் இருக்கும் catechins செல் சேதத்தைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களின் ஒரு வடிவமாகும்.