இன்றைய வாழ்க்கை முறையில் எதை செய்தாலும் அது நமக்கு சாதகமாக அமையாமல் பாதகமாக அமைந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வாழ்வியல் மாற்றங்கள் தான். மிகச் சில மாற்றங்களே நமக்கு நன்மை தர கூடியதாக இருக்கிறது. பல்வேறு விஷயங்கள் நமது உடல் நலத்திற்கு கேடு தருபவையாக உள்ளன. இதனால் முகத்தின் அழகும், சருமத்தின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
குறிப்பாக நாம் சாப்பிடும் உணவுகள், முகத்திற்கு பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த பொருட்கள், உடற்பயிற்சி இல்லாமை, அதிக மாசு போன்ற பல காரணிகள் சருமத்தையும் அழகையும் பாதிக்கும். இதனை எளிதாக சரி செய்ய சில இரவு நேர ஸ்கின்கேர் ரொட்டீனைப் பின்பற்ற வேண்டும் என்று அழகியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
தூங்கச் செல்வதற்கு முன் மேக்கப்பை நீக்க வேண்டும் : நம்மில் பலர் செய்யும் மிக பெரிய தவறு இது தான். அதாவது காலை நேரத்தில் முகத்திற்கு போட்ட மேக் அப்பை நீக்காமல் அப்படியே வைத்து கொண்டு இரவில் தூங்குவது தான். இதை இனி எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள். எனவே இரவு தூங்குவதற்கு முன் மேக் அப்பை முழுவதுமாக நீக்கி விட்டு தூங்குங்கள். பிறகு சிறிது மாய்ஸ்சரைஸரை கொண்டு முகத்திற்கு மசாஜ் கொடுங்கள். இதில் கெமிக்கல் இல்லாததாக பார்த்து கொள்ள வேண்டும்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் : சருமத்தை அழகாக பார்த்து கொள்ளும் தன்மை இயற்கையாகவே தண்ணீருக்கு உண்டு. ஆம், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைத்தாலே நமக்கு ஏற்படும் முக்கால்வாசி பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம். எனவே இரவு நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடித்து விட்டு தூங்குங்கள். மேலும் இரவு நேரத்தில் மதுபானம், காக்டெயில் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. இல்லையென்றால் இவற்றால் முகப்பரு, கரும்புள்ளிகள், நீர்சத்து குறைபாடு போன்ற சிக்கல்கள் உண்டாகும்.
ஃபேஸ் சீரம் : பொதுவாக முகத்தை பொலிவாக வைத்து கொள்ள ஃபேஸ் சீரம் மிகவும் உதவும். காலை மற்றும் இரவு நேரங்களில் இதை முகத்திற்கு பயன்படுத்தலாம். மேலும் உங்கள் சருமத்துக்கு ஏற்ற சீரம் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் வாங்குகிற ஃபேஸ் சீரமில் ஹையலூரோனிக் அமிலம், வைட்டமின் சி ஆகிய மூலப்பொருட்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
ஃபேஸ் கிரீம் : சந்தையில் ஏராளமான ஃபேஸ் கிரீம்கள் நிறைந்திருந்தாலும், குங்குமாதி தைலம் சார்ந்த கிரீம்கள் பாதுகாப்பானவை மற்றும் சிறந்தவை. இது அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது; மேலும் வறண்ட மற்றும் சென்சிட்டிவ் வகை சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆண்டிசெப்டிக், கிருமி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் பல சிறந்த பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே மேக் அப்பிற்கு பிறகு முகப்பரு மற்றும் தழும்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளில் இருந்து இது பாதுகாக்கும்.