குளிர்காலம் சருமத்திற்கு கடினமான காலம். எனவே, அவற்றை முறையாக நாம் பராமரிக்க வேண்டியது அவசியம். சருமத்திற்கு ரசாயனங்கள் நிறைந்த கிரீம்கள் மற்றும் லோஷன்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனென்றால், இதில் உள்ள சில அமிலங்கள் சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க எண்ணெய் சிறந்தது. எனவே, இயற்கையான எண்ணெய்களை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும்.
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு அதிக நன்மையை கொடுக்க கூடியது. சருமத்தை ஈரப்பதமூட்டுவது முதல் இறந்த செல்களை குணப்படுத்துவது வரை பல நன்மைகளை கொடுக்கிறது. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை, முகம், கை, கால்களில் உபயோகித்தால் சருமத்தை ஈரப்பதமாக வைப்பதுடன், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எனவே, குளித்த பின் மாய்ஸ்சரைசராக இதைப் பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தில் சருமத்திற்கு பல்வேறு பலன்களை தரக்கூடிய எண்ணெய் தேயிலை எண்ணெய் (tea tree oil). இதில் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு குணங்கள் உள்ளது. இது, வறட்சி, அரிப்பு மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராடும். இதை எப்போதும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
பியூர் ஆலிவ் ஆயில் சருமத்திற்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை வழங்கும். இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி முகத்தை மென்மையாக்குகிறது. ஆலிவ் எண்ணெயில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது இயற்கையான மாய்ஸ்சரைசர் ஆகும். எனவே, இதை குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம். சருமம் மிகவும் வறண்ட நிலையில் காணப்பட்டால் ஆலிவ் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து மசாஜ் செய்யவும்.
பாதாம் எண்ணெய் வறண்ட சருமத்திற்கு பயனளிப்பதுடன், அரிப்பு, புண் மற்றும் வறட்சியைப் போக்க உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, சரும செல்களுக்கு புத்துயிர் அளிப்பதுடன் பளபளப்பாக்கும். பாதாம் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது மற்றும் குளிர்காலத்தில் தோல் வெடிப்பு மற்றும் எரிச்சலை குணப்படுத்தும். இதை ஃபேஸ் பேக்குகளில் சேர்த்து பயன்படுத்தலாம். பத்தாம் எண்ணையை முட்டையின் மஞ்சள் கருவுடன் கலந்து சருமத்தில் தடவினால், சருமம் மென்மையாகும்.