வீட்டில் இருக்கும் போது நமது சரும பாதுகாப்பை எளிதாக நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் இதுவே வெளியூருக்கு பயணம் செய்யும் காலங்களில் இது பெரும்பாலும் சாத்தியமற்றதாக மாறிவிடும். இதற்கு காரணம் பல உண்டு. குறிப்பாக பயண நேரங்களில் நாம் எதாவது செய்து கொண்டே இருப்பதால் நம்மை கவனித்து கொள்ள மறந்து விடுகிறோம். இந்த வேலை நேரங்களிலும் உங்களை சிறப்பான முறையில் கவனித்துக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஈரப்பதம் : சருமத்தை பாதுகாப்பான முறையில் வைக்க உங்களுக்கு அவசியம் தேவையான ஒன்று ஈரப்பதம் தான். ஆம், சருமத்தில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லையென்றால் பல்வேறு பாதிப்புகள் வர தொடங்கும். குறிப்பாக சருமம் வறட்சி, கரும்புள்ளிகள், சுருக்கம் ஆகிய பாதிப்புகள் உருவாகும். எனவே பயணத்தின் போது உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க மாய்சரைஸர் பயன்படுத்துங்கள். இது மென்மையான, பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை தரும்.
நீரேற்றம் : லிப்பிட் போன்ற மூலப்பொருட்கள் தோலில் ஈரப்பதம் குறைவதை தடுக்கிறது. மேலும் இவை சுற்றுச்சூழலில் உள்ள மாசுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. எனவே இதற்கு நல்ல மாய்சரைஸரை பயன்படுத்துங்கள். சருமத்தில் எப்போதும் நீரேற்றம் இருக்க இவை உதவுகிறது. இதற்கு ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.
சன்ஸ்க்ரீன் : எஸ்.பி.எஃப் உள்ள புராடெக்டுகளை பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. பயணத்தின் போது சன்ஸ்கிரீனைப் போடுவதால் எந்தப் பயனும் இல்லை என்று நீங்கள் உணரலாம். ஆனால், இது அப்படி இல்லை. சன்ஸ்கிரீன் லோஷன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். குறிப்பாக சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்களால் தோலிற்கு எந்த பாதிப்பும் ஏற்படலாம் இருக்க இது உதவுகிறது. இதை 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை அப்ளை செய்வது நல்லது.
கிளென்சர் : பொதுவாக வெளியில் பயணம் செய்யும்போது அதிக படியான மாசுக்கள் சருமத்தில் ஒட்டி கொள்ளும். எனவே உங்கள் சருமத்தை கிளென்சரை கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் கிளென்சரானது அதிக படியானகெமிக்கல்ஸ் இல்லாததாக பார்த்து வாங்குங்கள். இல்லையேல் இதுவே சருமத்தை பாதிக்க செய்து விடும்.
டோனர் : வெளியில் செல்லும் போது எந்த வித சரும எரிச்சலும் இல்லாமல் இருக்க டோனர் மிக அவசியம். இதை பயன்படுத்துவதால் சருமம் சிவந்து போகாது மற்றும் எரிச்சலை உண்டாக்காது. இவை சருமத்தில் உள்ள ph அளவையும் சீராக வைக்கும். இதனால் உங்கள் முகம் பொலிவாக இருக்கும். அதே போன்று சோர்வான வறண்ட சரும பாதிப்பில் இருந்து காக்கும். பயணத்தின் போது ஏற்பட கூடிய எண்ணெய் பிசுக்கு, வியர்வை பிசுக்கு ஆகியவற்றையும் இது சுத்தம் செய்து விடும்.