முகப்பருக்களை சிறிது கவனிக்காமல் விட்டாலும், அவை முகத்தில் வடுக்களை போல தெரிய ஆரம்பித்துவிடும். இதனால் நாம் முக அழகை கெடுத்து விடுகின்றன. முகப்பரு பிரச்சனை இருக்கும் நபர்கள் ஒரு சிறப்பான தோல் பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் முகப்பருக்கள் தோன்றாமல் இருக்கும். முகப்பருக்கள் இல்லாமல் இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் அதற்கு பின்வரும் வழிகளை பின்பற்றினாலே போதும்.
குளிர்கால பேஸ் மாஸ்க் : சருமத்தின் பளபளவிற்கு நீங்கள் செய்ய வேண்டிய தினசரி பராமரிப்புக்கு நடுவில் நேரம் கிடைத்தால், வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு சருமத்தை அழகுப்படுத்தி கொள்ளலாம். 1/2 மணி நேரத்திற்கு காய்ச்சாத பாலை முகத்தில் தடவி ஊறவிட்டு கழுவலாம். கடலை மாவு பேக் போடலாம். எலுமிச்சை, தேன், சர்க்கரை அல்லது ஓட்ஸ் போன்றவற்றை கொண்டு சருமத்தை சுத்தம் செய்யுங்கள். உருளைக்கிழங்கு சாறை முகத்திற்கு பயன்படுத்துங்கள். கற்றாழை பேக் போடுங்கள். வெள்ளரி, தக்காளி, வாழைப்பழம், பப்பாளி போன்ற ஃபேஸ் பேக் கூட சருமத்தை ஜொலிக்க வைக்கும்.
உங்கள் சருமத்தை சுத்தம் செய்யுங்கள் : உங்கள் தோல் வகை எதுவாக இருந்தாலும், உங்கள் காலை நேரத்தை ஒரு நல்ல சுத்தப்படுத்தியுடன் தொடங்குங்கள். முகப்பருவால் பாதிப்புக்குள்ளான சருமத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தப்படுத்துவது முக்கியம். இதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள அனைத்து வகையான அசுத்தங்கள், எண்ணெய் மற்றும் அழுக்குகளை அகற்ற இந்த முறை உதவுகிறது, இதன் விளைவாக முகத்தில் இருக்கும் கறைகள், ஒயிட்ஹெட்ஸ் அல்லது பிளாக்ஹெட்ஸ் என அனைத்தும் நீங்கி சருமம் பளிச்சென்று மாறும். உங்கள் முகத்தை சுத்தப்படுத்த தேயிலை மர எண்ணெய், பால் மற்றும் தேன் போன்ற பொருட்களைக் கொண்ட சில இயற்கை கிளீனர்களை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த குளிர்காலத்தில் அவை உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
சருமத்திற்கான உணவுகளை சாப்பிடுங்கள் : உடல் ஆரோக்கியம் போன்றே சரும ஆரோக்கியத்துக்கு பிரத்யேகமான உணவுகள் உண்டு. தொடர்ந்து ஒரு வாரம் உங்கள் உணவு முறையை சருமத்துக்கு ஏற்றபடி மாற்றி பார்த்தால் சருமத்தில் ஜொலிப்பை காணலாம். குறிப்பாக தக்காளி, ப்ரக்கோலி, உலர்பருப்புகள், அவகேடோ பழம், பெர்ரி, கீரைகள், மீன், எலுமிச்சை, ஆரஞ்சு, இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை தினம் ஒருவேளைக்கு சேர்த்து எடுங்கள் வித்தியாசம் நன்றாகவே தெரியும். சருமம் வறட்சியை சந்திக்காமல் இருக்க போதுமான நீரை குடிப்பதை உறுதி செய்யுங்கள். குளிர்காலத்தில் தாகம் இல்லையென்று தவிர்க்காமல் உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள். நீரிழப்பு உண்டாகும் போது தோல் சேதமடையக்கூடும். குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீரை குடிப்பதன் மூலம் சருமத்தில் அதிசயத்தை பார்க்கலாம்.
கிரீன் டீ மற்றும் தேன் : கிரீன் டீ சரும ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருவதாக கூறப்படுகிறது. ஒரு சிறிய க்ரீன் டீ பையை தண்ணீரில் காய்ச்சவும், பின்னர் அதனை குளிர வைக்க வேண்டும். அது குளிர்ந்தவுடன் அதனை பரு மீது வைக்கவும். இது ஒரு பயனுள்ள தீர்வு. கிரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. தோல் பராமரிப்புக்கு தேன் சிறந்த பண்புகளை கொண்டுள்ளது. இது பருக்கள் நிறைந்த சருமத்திற்கு அதிசயங்களை செய்யும். தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்கவும் குணப்படுத்தவும் உதவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல் ஒன்று அல்லது இரு துளி தேனை பயன்படுத்துங்கள். காலையில் எழுந்து முகத்தை கழுவுங்கள். ஒரே இரவில் பருக்கள் மறைவதை நீங்கள் காணலாம்.
சன்ஸ்க்ரீனை பயன்படுத்தவும் : இப்போது நீங்கள் குளிர்காலத்தில் இருந்தாலும் முன்னர் வெயிலில் பாதித்த உங்கள் சருமம் இன்னமும் தொடர்கதை தான். பொதுவாக நம் சருமத்தை அதிகம் பாதிப்பதில் முதலிடம் கடுமையான வெயில் தான். புற ஊதாக்கதிர்கள் அதிகமாக சருமத்தில் படும் போது சருமத்தின் நிறம் மாற்றமடைகிறது. புற ஊதாக்கதிர்கள் சரும புற்றுநோயை உண்டாக்கும் அளவுக்கு வீரியம் கொண்டது. சருமத்தின் பளபளப்பை உறிஞ்சும் இக்கதிர்களிலிருந்து சருமத்தை காப்பாற்றி கொள்ள சன்ஸ்க்ரின் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டாம்.
குறிப்பிட்ட பருவத்தை நாம் அடையும் பொழுது முகப்பருக்கள் ஏற்படுவது சாதாரணம். ஆனால் அவை சில காலங்களுக்கு மட்டுமே இருக்கும். நீண்ட காலங்களாக முகப்பருக்கள் இருந்தால் உங்கள் உடலில் சில சத்துக்கள் குறைபாடு உள்ளதை நீங்கள் கண்டறிய வேண்டும். அதற்கு மேற்சொன்னவைகளை பின்பற்றினால் இந்த குளிர்காலத்தில் ஏற்படும் முகப்பருக்களில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். கூடுமான அளவிற்கு இயற்கை பொருட்களை உங்கள் சருமத்தில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.