கோடை காலத்தில் வியர்வை காரணமாக நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். இதற்கு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது அவசியம். சருமத்தை ஸ்க்ரப் செய்வதால் இறந்த செல்களை அகற்றி சருமத்தை பிரகாசமாக்க முடியும் என சரும பாதுகாப்பு நிபுணர் ஷானாஸ் ஹுசைன் விளக்குகிறார். இதுகுறித்து அவர் கூறிய தகவல்களை இங்கு காண்போம்.,
ஸ்க்ரப் செய்வதால் சரும துளைகளில் உள்ள அழுக்குகள், எண்ணெய் பசை, கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் வராமல் தடுக்க முடியும். கோடையில், இயற்கையாகவே குளிர்ச்சி தரும் பொருட்களான முல்தானி மெட்டி போன்றவற்றை கொண்டு ஸ்க்ரப் செய்து பயன்படுத்தலாம். முல்தானி மெட்டியுடன் பன்னீர், சந்தனம், பழங்கள், வெள்ளரி, மற்றும் கற்றாழை சேர்த்து சருமத்தில் பயன்படுத்தலாம் என விளக்குகிறார்.
ஓட்ஸ், முட்டை ஸ்க்ரப் : எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் வாரம் ஒரு முறை ஓட்ஸ், முட்டையின் வெள்ளைக்கருவை ஒன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்யலாம். சிறிது நேரம் உலர்ந்த பின்னர் தண்ணீர் கொண்டு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து கழுவவும். முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஓட்ஸ் இரண்டும் எண்ணெய் பசையை குறைக்க உதவுகிறது.
பப்பாளி ஸ்க்ரப் : பப்பாளியுடன் ஓட்ஸ் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக தேய்த்து, தண்ணீரில் கழுவவும். பப்பாளி சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது. பப்பாளியில் பப்பைன் என்ற நொதி உள்ளது, இது இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.