ஒல்லியான தேகத்திற்கு ஆசைப்படாத ஆட்களே கிடையாது. என்ன தான் உடல் எடையைக் குறைத்து கவர்ச்சிகரமாக மாறினாலும், உங்கள் கால்களும் காண்போர் கண்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் ஸ்லிம்மாக இருக்க வேண்டும். அழகு என்பது முழு தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயம். உங்கள் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் கவனம் செலுத்துவதும், அழகுபடுத்துவதும் உங்களுக்கு தன்னம்பிக்கையை தரக்கூடியது ஆகும். எனவே கால்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
கால்களில் உள்ள தசைகளை வலிமையாக்கி, கால்களை கவர்ச்சிகரமானதாக மாற்ற உடற்பயிற்சியைத் தவிர வேறு எதுவும் சிறப்பான வழிகள் இல்லை. உங்கள் நடை, பாவனை, ஸ்டைலுக்கு ஏற்ற கால்களைப் பெற உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது, இதற்கு யோகா பயிற்சியும் சிறப்பான பலனைக் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தொடைகளில் கட்டிகள் மற்றும் சிறிய வீக்கங்களைக் கொண்ட செல்லுலைட், கால்களின் தோற்றத்தை கெடுக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது ஆகும். செல்லுலைட் நீர், கொழுப்பு மற்றும் பிற கழிவுகள் தோலுக்கு அடியில் தேங்குவதால் உருவாகிறது. உடலின் கழிவுகளை அகற்றும் செயல்முறையின் வேகம் குறைவதே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நாள்பட்ட மலச்சிக்கல், மந்தமான செரிமானம், மோசமான கல்லீரல் செயல்பாடு, மன அழுத்தம், நாள்பட்ட சோர்வு, தூக்கமின்மை மற்றும் உட்காந்து கொண்டு பல மணி நேரங்கள் வேலை பார்ப்பது போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும்.
எனவே, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தினசரி உணவில் புதிய பழங்கள், சாலட்கள், முளை கட்டிய பயிறு வகைகள் மற்றும் பாலிஷ் செய்யப்பட்டாத பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலில் சேரும் கழிவுகளை முறையாக வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். வழக்கமான உடற்பயிற்சி அல்லது உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
உடலின் முழு மேற்பரப்பும் ஒரு கடினமான துணி அல்லது இயற்கையான ப்ரிஸ்டில் தூரிகையைப் பயன்படுத்தி துலக்கப்படுகிறது. பாதங்களிலிருந்து தொடங்கி தொடைகளை நோக்கி மேல்நோக்கிச் செல்ல வேண்டும். பின்னர் கைகளின் கீழ் இருந்து மேல் கைகள் வரை துலக்கவும். தோள்கள் மற்றும் அதன் பின்புறத்தையும் நன்றாக துலக்க வேண்டும். மார்பு மற்றும் வயிற்றில் மெதுவாக தேய்க்க வேண்டும். கடைசியாக சூடான நீரில் நன்றாக குளித்து முடிக்கவும்.
கால்கள் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க, ஹேர் ரிமூவ் செய்வது முக்கியமாகும். வாக்சிங் என்பது கால்களில் இருந்து முடியை அகற்றுவதற்கான மிகவும் பிரபலமான முறையாகும். மேலும் இது மலிவாகவும், உடலில் உள்ள தேவையற்ற முடிகளை ஒரே முயற்சியில் அகற்றிவிடலாம் என்பதாலும் இது அதிகம் பேரால் விரும்பப்படுகிறது. இதில் உள்ள ஒரே ஒரு அசெளகரியம் வேக்சிங் செய்யும் போது ஏற்படும் வலியாகும். எனவே இதனை அழகு நிலையங்களில் செய்து கொள்வது நல்லது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில், முடி வளர்ச்சி குறைந்து, மென்மையாக மாறும்.
பலர் ஹேர் ரிமூவ் செய்ய கிரீம்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். இதனால் சருமம் சிவந்து போவது, தடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இப்போதெல்லாம், இளம் பெண்கள் மத்தியில் எபிலேட்டர் மூலம் முடியை அகற்றுவது பிரபலமாகி வருகிறது. இந்த சிறிய கேஜெட், வீட்டில் பயன்படுத்த எளிமையானது, மேலும் இதில் சிறப்பான ரிசால்ட்டைப் பெற ஒரு குறிப்பிட்ட நீளத்திற்கு முடி இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.