

லிப்ஸ்டிக் பெண்களின் நம்பிக்கையை மிகப்படுத்தும் அழகுசாதன பொருள். லிப்ஸ்டிக் அணியாத பெண்கள் என்பது சொற்பமான எண்ணிக்கையே என சொல்லக்கூடிய அளவிற்கு பெண்களின் அடிப்படை தேவையாக உள்ளது.


இப்படி பெண்களின் பைகளில் எப்போதும் இடம் பிடிக்கும் இந்த லிப்ஸ்டிக்குகளின் விற்பனை கொரோனாவால் வீழ்ச்சி அடைந்துள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு மாதங்களாக லிப்ஸ்டிக்கின் விற்பனை மந்தமடைந்துள்ளதாக ஸ்னாப்டீல் நிறுவனம் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளது. அதேசமயம் கண்களுக்கான மேக்அப் பொருட்கள் அதிக விற்பனையை கொண்டுள்ளதாக கூறியுள்ளது.


அதாவது ”மாஸ்க் அணிவதால் முகத்தின் மேற்புறம் மட்டுமே தெரிகிறது. இதனால் கண்களில் முன்பை விட போல்டான ஐ மேக்அப் செய்துகொள்ள விரும்புகின்றனர். அடர்த்தியான மை, மஸ்காரா, ஐ ஷாடோ என கண்களை ஹைலைட் செய்ய விரும்புகின்றனர்” என்கிறார் இந்தியாவின் லாரியல் பேரிஸ் மேக்அப் கலைஞர். அதேபோல் மாஸ்க் பாதி முகத்தை மூடிக்கொள்வதால் கண்கள்தான் சிரிப்பது, அழுவது என உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.


இது ஒருபுறம் இருக்க ஊரடங்கு என்பதால் ஷாப்பிங் மால்கள், ஸ்டோர்ஸ் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே அதிக விற்பனையை கொண்டுள்ளன. ஆன்லைன் ஆர்டர்களிலும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைப்பதால் அதிலும் லாபம் இல்லை. இதனால் ஆன்லைன் விற்பனையில் மட்டுமே உள்ள சில நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய மந்த நிலை.அதேபோல் பலரும் வீட்டில் அலுவலகப் பணி செய்வதாலும் லிப்ஸ்டிக் விற்பனை மந்தமாக உள்ளது என நைக்கா டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளது.