தற்போது பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இளம் வயதினர் கூட முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது. முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த விலையுயர்ந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் உள்ளிட்டவை தற்போது மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால் அவற்றை பயன்படுவதால் முடி உதிர்வு அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே முடி உதிர்தலுக்கான காரணங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலுக்கு மிக முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால், உங்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்த அன்றாட உணவில் கவனம் செலுத்தி, அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் சேர்ப்பது முக்கியம். இதுகுறித்து விளக்கிய ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிதிகா கோஹ்லி, "ஒரு சமச்சீர் உணவு உங்கள் தலைமுடி, தோல் மற்றும் நகங்களை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பெற உதவும்" என தெரிவித்துள்ளார்.
நெல்லிக்காய் : நெல்லிக்காய்யில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் ஜூஸ் தினமும் அருந்தி வர கூந்தல் ஆரோக்கியமாக வளரும். இது நுண்ணறைகளை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் இதன் நோய் எதிர்ப்பு தன்மை பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை கட்டுப்படுத்துகிறது. உங்கள் உச்சந்தலையை நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியை வலுவாக்கி, முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கி, உச்சந்தலைக்கு ஊக்கம் அளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகமாக்குகிறது.
மீன் மீன் அதிகம் சாப்பிட்டால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். மீனில் உள்ள புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கூந்தல் வறட்சியை நீக்கி பொலிவான கூந்தல் வளர்த்திக்கு உதவுகிறது. எனவே அதிலும் சால்மன், நண்டு, இறால் போன்ற கடல்வகை உணவுகளை வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவது நல்லது.
கறிவேப்பிலை : கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் புரதமும் பீட்டா-கரோடினும் வளமையாக உள்ளது. அவை உங்கள் இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி, உங்கள் உச்சந்தலையில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் முடியின் வேர்க்கால்களை இது மயிர்க்கால்களை புதுப்பிக்கிறது. கருவேப்பிலையை துவையல், சட்னியாகவும், கருவேப்பிலை சாதம் செய்தோ அல்லது வெறும் வாயில் கூட சாப்பிடலாம். இது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும், இதனால் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்னை சரியாகும்.
இனிப்பு உருளைக்கிழங்கு : இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது உடலால் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது முடியின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்குத் தேவையான டானிக் ஆகும். எனவே இனிப்பு உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வர முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் அவை உதிர்வதையும் தடுக்கிறது.
பருப்பு மற்றும் பீன்ஸ் : நாம் உண்ணும் உணவில் புரோட்டீன் அடங்கிய தானியங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ் போன்ற காய்கறிகள் , பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், கீரை ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்வது முடி வளர உதவும். இதில் ஃபோலிக் அமிலம், புரதம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த முடி செல்களை நீக்கி, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இவரை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் இதிலுள்ள சத்துக்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது.
முட்டை: முட்டையில் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும் பயோட்டின் என்கிற வைட்டமினும் உள்ளது. எனவே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.