வாழ்க்கை முறை மாற்றங்கள் கொண்டு வந்த சில பக்கவிளைவுகளில் பலரையும் பாதித்திருப்பது தலைமுடி உதிர்வு. ஊட்டச்சத்து பற்றாக்குறை, மோசமான உணவுப்பழக்கம் , நோய் , மனக்கவலை இப்படி பல காரணங்களால் தலைமுடி உதிர்வு அதிகரிக்கிறது. இதனால் இளமையிலேயே சிலர் வழுக்கை தலையை பெறுகின்றனர். எனவேதான் பலரும் தலைமுடி பிரச்சனையை சரி செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என தேடுகின்றனர். அந்த வகையில் உங்களுக்கு தலைமுடி உதிர்வதை தடுக்க அருமையான யோசனை உள்ளது. அதுதான் ஆப்பிள் சைடர் வினிகர்.
ஆப்பிள் சைடர் வினிகர் இன்று பலரும் எளிதாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது. எனவே இதைக்கொண்டு உங்கள் முடியை பராமரிப்பது என்பது எளிமையான ஒன்றுதான். ஆனால் இதைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் இத நொதிகள் தீவிர தன்மை கொண்டது என்பதால் நேரடியாக அப்ளை செய்யக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் தலைமுடியின் வேர்கள் சேதமடையக்கூடும். எனவே தண்ணீரில் கலந்தோ அல்லது ஏதேனும் வீட்டுக்குறிப்புகளுடனோ பயன்படுத்தலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் ஷாம்பூவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது நுரையை தராது என்றாலும் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கை போக்க உதவுகிறது. அதுமட்டுமன்றி இதில் விட்டமின் பி , ஃபோலிக் அமிலம் , விட்டமின் சி ஆகிய தலைக்கு ஊட்டமளிக்கும் பண்புகளும் உள்ளன. குறிப்பாக இது அனைத்து வகையான முடிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படி பயன்படுத்த வேண்டும் ..? : ஆப்பிள் சைடர் வினிகர் 4 டேபிள் ஸ்பூன் வீதம் எடுத்துக்கொண்டால் அதில் குறைந்தபட்சம் 4 கப் தண்ணீர் கலக்க வேண்டும். இவ்வாறு கலந்த பின் தலையை அந்த தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது ஷாம்பூ போன்று இருக்காது என்றாலும் நல்ல பலன் தரும். கிளென்சர் போன்று பயன்படுத்திக்கொள்ளலாம்.