கொளுத்தும் கோடை காலம் உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. வெளியே தலை காட்ட வேண்டும் என்றாலே, சன்ஸ்கிரீன், ஸ்கார்ப், குடை என அனைத்து பாதுகாப்பு அம்சத்துடன், ஏதோ போருக்கு புறப்படும் படை வீரர்கள் போலத்தான் போக வேண்டி இருக்கிறது. வெயில் காலம் வந்துவிட்டாலே வேர்க்குரு, கொப்புளங்கள், சன் டேன், சன் பர்ன், ரேசஸஸ் போன்ற சரும பிரச்சனைகளோடு வேறு போராட வேண்டியுள்ளது.
சன்ஸ்கிரீன் தடவிக்கொள்ளுங்கள்: சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் சருமத்திற்கு ஏற்படுத்தும் சேதம் என்பது வெறும் சன் டேன் மட்டும் கிடையாது. நிறமாற்றம், சீரற்ற அமைப்பு, கோடுகள், வயது முதிர்ச்சி, மந்தமான தோல் மற்றும் சுருக்கங்கள் ஆகியவற்றையும் விளைவிக்கிறது. சூரியனின் வெயில் தாக்கத்திற்கு ஆளாகும் பாகங்கள் மீது கட்டாயம் சன்ஸ்கிரீன் பூசிய பிறகே கொளுத்தும் வெயில் வெளியே செல்வது நல்லது.
சருமத்தை நீரேற்றமாக வைத்திருங்கள்: கோடையில் எல்லா நேரங்களிலும் நீரேற்றத்துடன் இருப்பது முக்கியமானது. எனவே, உங்கள் சருமத்தை சீரான இடைவெளியில் புத்துணர்ச்சியடைய அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் கழுவது அல்லது லேசாக முகத்திற்கு தண்ணீர் தெளித்து கொள்வது போன்ற செயல்முறைகளை மேற்கொள்ளலாம். உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நாள் முழுவதும் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.
எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்: உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான அழுக்கு மற்றும் எண்ணெய்யை அகற்ற வாரத்திற்கு இரண்டு முறையாவது ஃபேஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்தவும். உங்கள் முகத்தை ஸ்க்ரப் செய்வது துளைகளில் அடைப்பட்டுள்ள கறைகளை அகற்றலாம். ஆனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்க்ரப்பை தேர்வு செய்ய மறக்காதீர்கள். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வது சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், பொலிவையும் கொடுக்கும்.
ஓவர் மேக்கப்பைத் தவிர்க்கவும்: வெப்பமான கோடை நாட்களில், முகத்தில் ஓவராக மேக்கப் பூசிக்கொள்வது தேவையில்லாதது. இது சரும செல்களை சுவாசிக்க விடாமல் தடுக்கிறது. ஈரப்பதம் மற்றும் வெப்பம் தோலின் சுவாச திறனை பாதிக்கிறது. எனவே, ஓவராக பவுண்டேஷனை வாரிப்பூசியோ அல்லது பிற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தியோ மேக்கப் போடுவதற்கு பதிலாக, கோடையில் சிம்பிளான மேக்கப் முறைகளை பின்பற்றுங்கள். சிம்பிள் மேக்கப் லுக்கிற்கு லிப் பாம் மற்றும் லேசான மாய்ஸ்சரைசரை பயன்படுத்தினாலே போதும்.