வயது என்பது ஒரு எண் தான். வயது எதற்குமே தடை கிடையாது என்றாலும் வயதாவது என்பதை தடுக்க முடியாது. வயதாகும் போது நம் உடலின் செயல்பாடுகள் மற்றும் தோற்றம் இயற்கையாகவே மாற துவங்கும். குறிப்பாக 30 வயதுக்கு மேல் உடலில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கும். அதில் நாம் தவிர்க்கவே முடியாதது ஏஜிங் சைன்ஸ், வயதாவதற்கான அறிகுறிகள். செரிமான கோளாறு முதல், ஆற்றல் குறைவு, சோர்வு, நரைமுடி தோன்றுதல், முகச்சுருக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் 30 வயதுக்கு மேற்பட்டு தோன்றும்.
ஸ்பாட்ஸ் மற்றும் ஃபைன்லைன் என்பது முகத்தில் தோன்றும் வயதாவதற்கான அறிகுறிகள் என்று சரும நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடலில் இருக்கும் செல்கள் தன்னை தானே சரி செய்து செய்வதில் தாமதமாகும். எனவே சருமப் பளபளப்பு மற்றும் இளமையான தோற்றத்துக்கு உதவும் கொலாஜன் எனப்படும் காம்பவுண்ட் குறையத தொடங்கும்.
இயற்கையாகவே சருமத்தின் ஆரோக்கியமும் பொலிவும் குறைந்து முகத்தில் டாரக் ஸ்பாட்ஸ் தோன்றும், கண்களுக்குக் கீழே கருவளையம் அல்லது முகத்தில் லேசான சுருக்கம் ஆகியவை எல்லாமே வயதாவதற்கான இயற்கையான அறிகுறிகள் தான். ஆனால் சில நேரத்தில் நம்முடைய பழக்க வழக்கங்கள் காரணமாகவும் இளம் வயதிலேயே பலரும் வயதான தோற்றத்தில் காணப்படுகிறார்கள். எனவே, பொலிவான ஆரோக்கியமான தோற்றம் மட்டுமல்லாமல், உள்ளே இருந்து சரும ஆரோக்கியம் மேம்பட்டு, வயதாகும் அறிகுறிகளை தடுக்க, எளிமையான டிப்ஸ்.
முதலில் அடிப்படையை சரி செய்யுங்கள் :நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அது உங்கள் சருமத்தில் வெளிப்படும். ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட்டு, பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை குறைப்பதுதான் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி தினமும் குறைந்தபட்சம் 2 – 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். முதலில் நாம் சாப்பிடும் உணவு மற்றும் குடிக்கும் பானங்கள் ஆகியவை தான் நம்முடைய சரும ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. எனவே சாப்பிடும் உணவு ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருந்தால் சரும ஆரோக்கியம் பற்றி நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுவகைகளை தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி உங்கள் தோற்றத்தையும் இளமையாக வைத்திருக்க உதவும்.
சருமத்தை உறுதியாக, மென்மையாக வைக்க கொலாஜன் : சருமத்தின் இளமையான தோற்றம் மற்றும் எலாஸ்டிசிட்டி தன்மைக்கு உடலுக்கு தேவையான கொலாஜன் என்ற புரோட்டீனை உடலே உற்பத்தி செய்து கொள்கிறது, ஆனால் வயதாகும் பொழுது இந்த புரோட்டீன் உற்பத்தி குறைவதால் முக சுருக்கமும் சருமத்தொய்வும், ஏற்படும். நீங்கள் வயதாகும்போது கொலாஜன் உற்பத்தி குறையக்கூடாது என்று நினைத்தால் வைட்டமின் சி நிறைய இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். எந்த விதமான ஆன்டி ஏஜிங் அறிகுறிகளும் தோன்றாது. ஒருவேளை உங்களுக்கு தேவையான கொலாஜன் உற்பத்தி,உணவு மூலமாக கிடைக்கவில்லை என்றால் சரும நிபுணரின் பரிந்துரையோடு கொலாஜன் சப்ளிமென்ட்ரியும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கொலாஜன் சப்ளிமெண்ட் 30+ வயதினருக்கும் சருமத்தை ஆரோக்கியத்தை தக்க வைக்க உதவும்.
சன்ஸ்க்ரீன் அவசியம் : வெளிநாட்டினருக்குத்தான் சன்ஸ்க்ரீன் தேவை அவர்களுக்குத்தான் சூரிய ஒளியால் பாதிப்பு ஏற்படும் இந்தியர்களுக்கு தேவையில்லை என்ற கருத்து தற்போது மாறி வருகிறது. இந்தியாவிலும் சருமத்தை நேரடியாக தீவிரமாக பாதிக்கும் அளவுக்கு வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெப்பநிலை ஒரு பக்கம் என்றாலும், சூரிய ஒளியிலிருந்து UV கதிர்கள் நேரடியாக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு சிலருக்கு முகத்தில் திட்டுக்கள், டல்லான தோற்றம் காணப்படும். இதற்கு காரணம் வெயிலால் ஏற்படும் பாதிப்புதான். எனவே நீங்கள் வெளியில் செல்லும்போது, சன்ஸ்க்ரீனை அவசியமாக பயன்படுத்த வேண்டும், குறிப்பாக, அதிக SPF இருக்கும் சன்ஸ்க்ரீன் ஆன்டி-ஏஜிங் சரும பராமரிப்பில் மிகவும் முக்கியமானது. 30 வயதுக்கு மேல் உங்கள் தோற்றம் வயதாவதை தடுப்பதற்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
அவ்வபோது ஃபேசியல் மசாஜ் : ஃபேஷியல் மசாஜ் செய்து கொள்வது சருமத்தை ஆரோக்கியமாக்க மிகவும் அவசியமானது. மசாஜ் செய்யும் பொழுது நீங்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய், பழக்கலவைகள், தேன், கற்றாழை போன்ற பொருட்கள் சருமத்திற்கு ஊட்டம் அளிக்கும். அது மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் ரத்த நாளங்கல் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகமாகும், செல்களுக்கு புத்துணர்வளிக்கும். இவை அனைத்தும் இளமையான தோற்றத்தைத தரும். அதுமட்டுமின்றி முகத்தில் இருக்கும் இறந்த செல்களும் நீக்கப்பட்டு தோற்றப் பொலிவு மேம்படும்.