இன்றைய நவீன உலகில் மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், வேலைப் பளு போன்றவற்றின் காரணமாக பலர் சரும பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி தீர்வு தேட முடிவு செய்தாலும், பலர் நேரமின்மை காரணமாக கடைகளில் விற்கப்படும் அழகு சாதன பொருட்களை நாடுகின்றனர். எல்லா விதமான சரும பிரச்சினைகளை சமாளிக்கவும் கடைகளில் ஏராளமான அழகு சாதன பொருட்கள் கிடைக்கின்றன.
அந்த வகையில் ரெட்டினால் என்பது அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலப்பொருள் ஆகும். இது சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், மற்றும் ஹைப்பர்பிக்மெண்டேஷன் போன்றவற்றிற்கான தீர்வாக அமைகிறது. எனினும், ரெட்டினால் பற்றிய பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவின் மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
ரெட்டினால் சருமத்தில் கடுமையாக இருப்பதோடு அதனை எரிச்சலடையவும் செய்யலாம் : ரெட்டினால் சார்ந்த பொருட்களை முதன் முதலில் பயன்படுத்தும்பொழுது ஒரு சிலருக்கு சருமத்தில் எரிச்சல் மற்றும் வறட்சி ஏற்படலாம். எனினும், ஆரம்ப காலத்தில் சிறிய அளவில் பயன்படுத்தி, காலப்போக்கில் அளவை அதிகரித்து பயன்படுத்துவதன் மூலமாக இதனை குறைக்கலாம்.
ரெட்டினால்களை பகல் நேரத்தில் பயன்படுத்தக்கூடாது : பெரும்பாலும், ரெட்டினால் சார்ந்த பொருட்களை இரவு நேரத்தில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இது சூரிய கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும். ஆயினும், நீங்கள் ஒரு பரந்த ஸ்பெக்ட்ரம் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் தாராளமாக பகல் நேரத்தில் கூட நீங்கள் ரெட்னாலை பயன்படுத்தலாம்.