பொதுவாக குளிர்காலம் வந்தாலே போதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் எளிதில் வரும். அதேபோல, இன்னொரு பிரச்சனை என்னவென்றால் குளிர்காலம், நம் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். அதிக குளிர் காரணமாக சருமத்தில் ஈரப்பதம் குறையும், அதுவே சரும வறட்சிக்கு காரணமாகிறது. சரும வறட்சியை போக்க மாய்ஸ்சுரைசர், எண்ணெய் போன்றவற்றை தேய்த்துக் கொள்ளலாம். இதுபோன்ற காலங்களில் சருமம் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு உச்சந்தலையும் பாதிக்கப்படும்.
உங்கள் முடி வறண்டு, செதில்களாக மாறும் வாய்ப்பு ஏற்படும். எனவே குளிர்காலங்களில் எப்போதும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நம்மில் பலர் குளிர்காலங்களில் சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறோமே தவிர கூந்தல் பராமரிப்பு குறித்து மறந்துவிடுகிறோம். குளிர்காலம் முடியை உடையக்கூடியதாக்கி, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் மந்தமான நிலைக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.வெப்பநிலை குறையத் தொடங்கியவுடன், ஒருவர் தனது தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில எளிய டிப்ஸ்களை பின்வருமாறு காணலாம்.
1. தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை தவிர்க்க கூடாது: உங்கள் தலைமுடி வேரில் இருந்து நுனி வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தண்ணீர் குடிப்பதை குறைத்து விடக்கூடாது. அதேபோல ஆரோக்கியமான கொழுப்புகளான பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பூசணி விதைகள் மற்றும் பல நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் தலைமுடிக்கு தேவையான புரதத்தை கொடுக்கின்றன. இது உங்கள் தலைமுடியை உள்ளே இருந்து வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும். புரதம் உங்கள் தலைமுடி உடைவதை குறைப்பது மட்டுமல்லாமல், அவை உங்கள் சருமத்தையும் பளபளக்கச் செய்யும்.
2. தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்: தலையில் அடிக்கடி எண்ணெய் தடவும் போது குளிர்கால காற்றினால் உங்கள் கூந்தல் சேதமடையாமல் தடுக்க முடியும். நீங்கள் தலைக்கு குளிக்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு தலையில் எண்ணெய் தேய்த்து ஊற வைக்கலாம். நீங்கள் உங்களுக்கு விருப்பமான எண்ணெயை தடவலாம். ஆர்கானிக் எள் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகச்சிறந்தது.
3. கண்டிஷனிங்: கூந்தல் உடையாமல் இருக்க எண்ணெய் தடவுவது எந்த அளவுக்கு முக்கியமோ, கூந்தல் வறட்சியை தடுக்க உங்கள் தலையை கண்டிஷனிங் செய்வதும் அவசியம். தலை குளித்து முடித்த பிறகு உங்களுக்கு விருப்பமான ஹேர் கண்டிஷனிங் தயாரிப்புகளை பயன்படுத்தலாம். அல்லது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நீங்களே ஹேர் கண்டிஷனிங் செய்யலாம். இதற்கு சிறிது தயிர் கலந்து அதனுடன் சிறிது தேன் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் சில வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை சேர்த்து அந்த கலவையை கூந்தலில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். தயிர் ஒரு இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும். இதேபோல முட்டையின் வெள்ளை கருவை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
4.வெந்நீரில் தலைக்கு குளிப்பதை தவிர்க்கவும்: குளிர்காலங்களில் சூடு தண்ணீரில் குளிப்பது வழக்கம். ஆனால் சூடு தண்ணீரில் உங்கள் தலையை அலசும் போது உங்கள் தலைமுடியை மந்தமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும். உச்சந்தலையில் செதில்களாகத் தோன்றுவதைத் தவிர்க்க, வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலசுங்கள். இல்லையெனில் குளிக்கும் நீர் அறை வெப்பநிலையில் இருக்கலாம்.