மற்ற காலங்களை விடவும் குளிர் காலத்தில் உடல் நல பாதிப்புகள் அதிகம் ஏற்படும். அதே போன்று சரும பாதிப்புகளும் அதிக அளவில் உண்டாகும். சரும வறட்சி, முகத்தில் தோல் உரிதல், பொலிவு குறைதல் போன்ற முகம் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும். இதை எளிதாக சரிசெய்ய தினமும் ஒரு சில உணவுகளை எடுத்துக்கொண்டால் போதும் என தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். குளிர் காலத்தில் பொலிவிழந்த சருமத்தை அழகானதாக மாற்ற என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என இனி பார்ப்போம்.
கீரை வகைகள் :வெந்தய கீரை, முளைக்கீரை ஆகியவற்றில் வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதிலுள்ள வைட்டமின் எ சருமத்திற்கு ஈரப்பதம் தந்து மென்மையாக்கும். மேலும் முகப்பருக்களை குறைத்து, வரித்தழும்புகளை குணமாக்கும். கீரையில் அதிக அளவில் புரோட்டீன், இரும்புசத்து, தாதுக்கள் உள்ளன. இவை தோல், முடி மற்றும் முழு உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.
மசாலா மற்றும் மூலிகைகள் :மற்ற நாட்டு உணவுகளை விடவும் இந்திய உணவில் அதிக அளவு மசாலாக்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக இஞ்சி, இலவங்கம், ஏலக்காய், கிராம்பு, வெள்ளை மற்றும் கருப்பு மிளகு, பூண்டு போன்றவை குளிர் காலத்தில் உடலை வெதுவெதுப்பாக வைக்க உதவும். எனவே கிராம்பு மற்றும் ஏலக்காயை டீயில் போட்டு குடித்து வந்தால், உடலுக்கு வெதுவெதுப்பை தருவதோடு முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றையும் குறைக்கும்.இத்துடன் நீங்கள் தயாரிக்க கூடிய இனிப்பு உணவுகளில் சிறிது இலவங்க தூளை சேர்த்து வந்தால் சிறந்த பலனை உடலுக்கு தரும். இரத்த ஓட்டம் மற்றும் உடல் செயல்பாட்டை சீராக வைத்து முடி நன்றாக வளர இது உதவும். பூண்டில் நோய் தொற்றுகளை தடுக்கும் தன்மை, இளமையாக வைக்கும் தன்மை, உடல் வீக்கத்தை தடுக்கும் தன்மை போன்ற சிறப்பு பண்புகள் இருப்பதால் உங்கள் சருமத்தை மிக பாதுகாப்பாக பார்த்து கொள்ளும்.
சிட்ரஸ் பழங்கள் :வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை குளிர் காலத்தில் சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவடையும். முக்கியமாக எலுமிச்சை பழம், ஆரஞ்சு பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். ஆரஞ்சை ஜூஸாக சாப்பிடாமல் அப்படியே உரித்து சாப்பிடுங்கள். இல்லையேல் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் உடலுக்கு செல்லாது. சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், தோல் தொற்றுகள் போன்றவற்றை சிட்ரஸ் பழங்கள் தடுத்து விடும். மேலும் உங்களின் சருமத்தை எப்போதும் இளமையாக வைக்கும்.
உலர் பழங்கள் :நல்ல கொலஸ்ட்ரால், இரும்புசத்து, புரோட்டீன், கால்சியம், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சிறந்த ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பாதாம், பேரீச்சம் பழம், உலர் அத்திப்பழம், வால்நட் ஆகியவற்றை குளிர் காலங்களில் அவசியம் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு செய்வதால் சரும பொலிவு அதிகரிக்கும். மேலும் இதனால் முடியின் அடர்த்தி கூடும், சூரிய கதிர்களின் பாதிப்பகளில் இருந்து காக்கும், சருமத்தின் உள்ளிருந்து ஊட்டமளிக்கும்.
தானியங்கள் : குளிர் காலங்களில் ராகி, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் புரோட்டீன், கால்சியம், இரும்புசத்து, நார்சத்து ஆகியவை அதிகம் உள்ளது. இது போன்ற தானியங்கள் முழு உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். மேலும் வறண்ட சரும பிரச்சனைகளை தீர்த்து தோலிற்கு ஈரப்பதமூட்டும்.மேற்சொன்ன உணவுகளை குளிர் காலங்களில் அவசியம் சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமம் நிச்சயம் பொலிவாக இருக்கும்.