பண்டைய காலம் தொட்டு தேன் அழகு கலை சிகிச்சையில் முக்கிய பொருளாக விளங்கி வருகிறது. தேன் சருமத்தை செறிவூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. தேன் ஒன்று மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் அத்தனை அழகு கலை சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையில் ஆரம்பித்து, மந்தமான சருமத்தை பளிச்சென மாற்றுவது வரை அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய மேஜிக் ல் உள்ளது.
வீட்டில் ரிலாக்ஸாக இருக்கும் போது, உங்கள் சருமத்தையும் கொஞ்சம் கவனிக்கலாம் என நீங்கள் நினைத்தால், உடனே தேன் பாட்டிலை தேடி எடுங்கள். பியூட்டி பார்லருக்கு போய் ஆயிரக்கணக்கில் செலவழித்து தேவையில்லாத கெமிக்கல் பூச்சுக்களை எல்லாம் அள்ளிப்பூசாமல், வீட்டிலேயே தேன் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். இதற்கு தேனுடன் வீட்டிலேயே கிடைக்க கூடிய சில பொருட்கள் இருந்தால் மட்டும் போதும். இந்த ஃபேஷியலால் உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல பாக்கெட்டிற்கும் பாதுகாப்பு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். முழுக்க, முழுக்க தேனை மட்டுமே பயன்படுத்தி பார்லர்களைப் போல் ஃபேஷியலின் அனைத்து படிகளையும் மேற்கொள்வது எப்படி என பார்க்கலாம்.
தேன் கொண்டு முகத்தை சுத்தம் செய்யுங்கள்: தேனில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப்பசையை நீக்க உதவுகிறது. எனவே வழக்கமாக எப்போதும் ஃபேஷியலுக்கு முன்பு செய்து கொள்வது போல் தேனைக் கொண்டு முகத்தை கிலென்சிங் செய்து கொள்ளுங்கள்.
செய்முறை:
முதலில் முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவிக்கொள்ளுங்கள். பின்னர் ஈரப்பதமான முகம் மற்றும் கழுத்தின் மீது ஒரு மெல்லிய லேயர் போல தேனைப் பூசுங்கள். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, முகத்தை உலர வைக்கவும்.
தேனைக் கொண்டு ஃபேஸ் ஸ்க்ரப்:
ஒரு கிண்ணத்தில் தேனுடன், பொடியாக்கப்பட்ட சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும், ஈரப்படுத்தப்பட்ட முகத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த கலவையை தடவவும். பின்னர் முகம் மற்றும் கழுத்தை மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு, சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.
தேன் ஃபேஸ் பேக்:
பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான தேன் ஃபேஸ் பேக் செய்ய உங்களுக்கு தேனுடன் வாழைப்பழம் தேவை. இந்த தேன் மற்றும் வாழைப்பழ ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது.
செய்முறை: பாதி வாழைப்பழத்தை எடுத்து துண்டுகளாக நறுக்கி, நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளவும். கட்டிகள் இல்லாமல் கலவையை தயார் செய்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தின் மீது தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண நீரில் கழுவினால் போதும்.