குளிர்காலம் வந்தாலே உடலின் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக அரிப்பு, வறண்ட சருமம் மற்றும் பொடுகு ஆகியவை பொதுவான பாதிப்புகளாக ஏற்படும். இருப்பினும், இவை அனைத்திலும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பொடுகு மற்றும் புருவங்களில் ஏற்படும் அரிப்பு ஆகும். புருவத்தில் அரிப்பு ஏற்படத் தொடங்கும் போது மக்கள் பெரும்பாலும் அவதிப்படுகின்றனர். இதற்கு எளிதான தீர்வுகள் என்னென்ன உள்ளன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புருவங்களுக்கு அடியில் மற்றும் சுற்றியுள்ள தோல் பகுதியில் ஈரப்பதம் உள்ளதா என்பதை உறுதி செய்வது முக்கியம். பொதுவாக குளிர்காலத்தில் புருவங்களில் ஈரப்பதத்தைப் பெற மாய்ஸ்சரைசர் அல்லது ஹைட்ரேட்டிங் கிரீம்களை பயன்படுத்துவது மிக அவசியம். இல்லையெனில், தோல் உதிர்தல் மற்றும் புருவத்தில் பொடுகு உருவாகி எரிச்சலடையச் செய்யலாம். இதனை தடுக்க, புருவ பகுதியை ஈரப்பதமூட்டுவதே சிறந்த வழி.
உங்களுக்கு புருவங்களில் அரிப்பு இருந்தால், டீ ட்ரீ எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். இது புருவத்தில் ஏற்பட்டுள்ள தொற்றை நீக்குகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதைப் பயன்படுத்த, ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன், ஒன்று அல்லது இரண்டு சொட்டு டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து புருவங்களில் மசாஜ் செய்யவும். இது பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுகளை அகற்றும். மேலும், இது அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
புருவங்களுக்கு அடியில் உள்ள சருமத்தை எலுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்வது அங்கு உருவாகும் பொடுகுத் தொல்லையைக் குறைக்கும். மேலும், இறந்த சரும செல்களை அகற்றவும் இது உதவும். பொதுவாக எலுமிச்சை சாறு என்பது வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதை தயார்செய்ய, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை ஒரு டீஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து புருவங்களில் தடவவும். பிறகு, 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பின்னர், தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யலாம்.
புருவ பகுதியில் அரிப்பு இல்லாமல் இருக்க உங்கள் புருவம் மற்றும் முகத்தை அடிக்கடி தொடுவதை நிறுத்த வேண்டும். மேலும், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் இது வழிசெய்யும். ஒருவேளை, முகத்தை தொடுவதாக இருந்தால் கைகளை சுத்தம் செய்த பின்னரே முகத்தை தொடலாம். இல்லையேல், தொற்றுகள் கைகள் மூலம் பரவலாம்.