இயற்கை முறையில் நல்ல அடர்த்தியான, நீளமான தலைமுடி வேண்டுமா.? உங்களுக்கான டிப்ஸ் இதோ!
நீளமான அடர்த்தியான தலை முடி தான் பலராலும் விரும்பப்படுகிறது.
Web Desk | March 7, 2021, 10:20 AM IST
1/ 10
இன்றைய காலகட்டத்தில் உயிருக்கு நிகராக முடிக்கு முக்கியத்துவம் தரும் எண்ணம் அதிகரித்துள்ளது. நீளமான அடர்த்தியான தலை முடி தான் அழகின் அடையாளமாக உள்ளது. வேலைப்பளு, தூக்கமின்மை, மனஅழுத்தம், தவறான உணவு பழக்கவழக்கம் என பல்வேறு காரணிகளால் இளம்தலைமுறையினர் பலர் தங்கள் அழகான, அடர்த்தியான கூந்தலை சில ஆண்டுகளுக்குள் இழப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
2/ 10
பல ஆயிரங்கள், பல லட்சங்கள் வரை செலவு செய்து முடி வளர்ச்சிக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் பலர் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அதிகம் செலவின்றி நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கும் பொருட்கள் மூலம் இயற்கை முறையிலேயே நம்முடைய முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம். இழந்த முடியை பெறவும், முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யவும் உதவும் சில எளிமையான வீட்டு வைத்திய குறிப்புகளை நாம் பார்க்கலாம்.
3/ 10
வெங்காயம்: சமையலில் தவிர்க்கவே முடியாத முக்கிய பொருளாக இருந்து வருகிறது வெங்காயம். தற்போது இதன் விலை சற்றே அதிகம் என்றாலும் முடி வளர்ச்சியை தூண்டும் முக்கிய வேலையை செய்கிறது. நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் குணமுடையது வெங்காயம். இதை தொடர்ந்து தலை முடிக்கு பயன்படுத்துவதால் முடி கொட்டுவது நிற்கிறது. வெங்காய சாறை எடுத்து தலையில் தேய்த்து விரல்களை வைத்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
4/ 10
முடியின் வேர்க்கால்களில் பரவும் படி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வெங்காய சாற்றை கொண்டு தலை முழுவதும் பரவலாக தேய்க்க வேண்டும். பின் 45 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பூவால் வெங்காயம் வாசனை போகும் அளவுக்கு தலையை நன்றாக அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை என 2 முதல் 3 மாதங்களுக்கு இப்படி செய்து வந்தால் முடிவளர்ச்சி அதிகரிப்பதை காணலாம்.
5/ 10
தேங்காய்: வெங்காயத்திற்கு அடுத்து நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய். முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கும் பல்வேறு சத்துக்கள் தேங்காய் பாலில் உள்ளது. முடி உதிர்தல், உடைத்தல் போன்ற பிரச்சனைகளை தேங்காய் பால் பயன்படுத்துவதால் குறைக்கலாம்.
6/ 10
தேங்காயிலிருந்து எடுத்த பாலை தேவையான அளவு எடுத்து கொண்டு உங்கள் தலையில் உள்ள முடியை சரி செய்ய வேண்டிய இடங்களில் விரல்களால் நன்கு தடவி கொள்ளுங்கள். 3 முதல் 4 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசி விடுங்கள். மாதம் 2 அல்லது 3 முறை இதனை வழக்கமாக்கி கொண்டால் சிறந்த பலனை பெறலாம்.
7/ 10
நெல்லிக்காய்: முடி பிரச்னை என்றாலே பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது நெல்லிக்காய் தான். நெல்லியின் பல்வேறு குணாதிசயங்கள் பற்றி சிறு வயது முதலே அனைவரும் அறிந்திருப்போம். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் கிடைக்கும். இது தலைமுடியின் நிறமியையும், முடி வளர்ச்சியையும் நன்கு மேம்படுத்தும்.
8/ 10
2 ஸ்பூன் அளவு நெல்லிக்காய் பொடி அல்லது ஜூஸை, 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸுடன் கலந்து தலையில் முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவுங்கள். பின் 30 முதல் 45 நிமிடங்கள் தலையை காய வைத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் தலையை நன்றாக அலசி விடுங்கள். கூடவே எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் நெல்லிக்காயை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
9/ 10
கற்றாழை சாறு: கற்றாழை இறந்த சரும செல்கள் மற்றும் மயிர்க்கால்களை சரி செய்ய தேவையான புரோட்டியோலிடிக் என்சைம்களைக் கொண்டிருக்கிறது. தினமும் காலை வேலையில் ஒரு கிளாஸ் கற்றாழை சாறு குடித்து வந்தால் முடி விரைவாக வளரும்.
10/ 10
மேலும் அடர் பச்சை நிறமுள்ள காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பால், பால் பொருள்கள், முழுத் தானியங்கள், காளான், ஆரஞ்சு, முந்திரி, பாதாம், வாழைப்பழம், மீன், ஈரல் போன்ற உணவுகளை தவறாமல் எடுத்து வந்தால் அவை தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.