உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற வகையில் க்ரீம்களை பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என நினைக்கிறீர்களோ? அதே அளவிற்கு பருவ நிலைக்கு ஏற்ற மாதிரியான சரும பராமரிப்புகளை பின்பற்றுவதும் கட்டாயம் ஆகும். பொதுவாக இந்தியர்களுக்கு 4 வகையான சரும வகைகள் உள்ளன. உலர் சருமம், எண்ணெய் சருமம், இயல்பான சருமம், வறட்சி கலந்த் காம்பினேஷன் சருமம் ஆகியனவாகும்.
இதில் அந்தந்த சரும வகைக்கு ஏற்ற மாதிரியான க்ரீம்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவோம். இதனை காலத்திற்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை. குறிப்பாக உங்களது சரும வகை எதுவாக இருந்தாலும் கோடை மற்றும் குளிர் காலங்களில் அது சந்திக்கும் பிரச்சனைகள் வேறு மாதிரியானதாக இருக்கும். அதனால் பருவ காலத்திற்கு ஏற்ற மாதிரி சரும பராமரிப்பு முறைகளையும் மாற்றுவது அவசியமாகிறது.
குளிர் கால சரும பராமரிப்பு: குளிர் காலத்தில் வீசும் குளிர்ச்சியான காற்றும், நீராவி குளியல், கதகதப்பிற்காக பயன்படுத்தும் ஹீட்டர் போன்றவற்றில் இருந்து வெளியாகும் வெப்பம் ஆகியவை சருமத்தை இன்னும் விரைவிலேயே உலர்ந்து போகச் செய்கிறது. மேலும் இது சருமத்தின் பாதுகாப்பு எல்லைகளை எல்லாம் கடந்து, வீக்கம், வறட்சி, அசெளகரியம் போன்ற பிரச்சனைகளை கொடுக்கிறது.
தோல் வறட்சி அடைகிறதே என்பதற்காக நீரால் முகத்தை கழுவுவதையும், குளிப்பதையும் அடிக்கடி செய்வது பிரச்சனைகளையும் மேலும் சிக்கலானதாக மாற்றிவிடும். இதனால் சருமத்தின் வறட்சி அதிகரிக்கும். அதற்கு மாற்றாக அதிக அளவில் தண்ணீரை குடிப்பது சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். மேலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் க்ரீம்களை பயன்படுத்துவதும் நல்ல பலனை தரும்.
கோடை காலத்தில் இயற்கையாகவே சருமம் அதிக அளவிலான எண்ணெய்யை சுரப்பதால், பிசுபிசுப்பான, கிரீஸ் பூசியது போன்று முகம் மாறிவிடுகிறது. இதனால் கோடை காலத்தில் உங்களது சருமத்தின் மீது கூடுதல் அடுக்குகள் வளர்வதை தவிர்க்கவும், சருமத்தை சுவாசிக்க வைக்கவும் தேவையான அழகு சாதன பொருட்கள், க்ரீம்கள் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.
குளிர், கோடை கால சரும பராமரிப்பு முறைகள்: க்ளென்சரை மாற்றுங்கள்: எந்த வகை சருமாக இருந்தாலும் அதனை சுத்தப்படுத்தி, பளீச் பொழிவை கொடுக்க க்ளென்சர் பெரும் பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட சுத்தப்படுத்தி என அழைக்கப்படும் க்ளென்சரை குளிர் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்றவகையில் தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது.
குளிர் காலத்தில் க்ரீம் க்ளென்சர்கள் தேவைப்படுகின்றன, அவை உடனடியாக வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. ஆனால் வானிலை வெப்பம் மிகுந்த கோடை காலமாக மாறும் போது க்ரீம் க்ளென்சர்கள் பலனளிக்காது. எனவே ஹைட்ரேட்டிங் கிளென்சரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, களிமண் ஃபேஸ் வாஷ் அல்லது லைட் ஜெல் போன்ற தயாரிப்புகளை முயற்சிப்பது சிறந்த பலனை தரும்.
ஃபேஸ் சீரத்தை மாற்றுங்கள்: வயது அதிகரிக்க, அதிகரிக்க முகத்தில் அதனை காட்டி கொடுக்கும் படியான கோடுகள், தோல் சுருக்கங்கள் ஏற்படுவது உண்டு. அதனை சரி செய்ய சீரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. காலேஜ் செல்லும் டீன் ஏஜ் பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை சீரத்தை பயன்படுத்துகின்றனர். முகப்பொலிவை கூட்டிக்காட்ட நீங்கள் பயன்படுத்தும் சீரத்தையும் பருவ நிலைக்கு தகுந்த மாதிரி மாற்றுவது, சருமத்திற்கு நல்லது.
சன் ஸ்கிரீனை மறக்காதீர்கள்: ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு பொருள் என்றால் அது சன் ஸ்கிரீன் என்று கூட சொல்லலாம். குளிர் காலத்தில் குறைந்த SPF கொண்ட மாய்ஸ்சரைசர் க்ரீம்களை பயன்படுத்தலாம். அதுவே சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க குறைந்த பட்சம் 50 சதவீதம் SPF கொண்ட சன் ஸ்கிரீன் லொஷன்களை பூசிக்கொள்வது நல்லது.
கொளுத்தும் வெயிலில் குளு, குளுவென இருக்கனுமா? கோடை காலம் வந்துவிட்டாலே அதிகப்படியான வியர்வை காரணமாக உங்கள் சருமத்தில் எண்ணெய் பசை அதிகரித்துவிடும். கோடையில் வெயிலின் கொடுமையை மறந்து குளிர்ச்சியாக இருக்க, புத்துணர்ச்சியூட்டும் ஃபேஸ் ஸ்ப்ரேயை கையில் வைத்திருங்கள். தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் சுட்டெரிக்கும் போது, அதை லேசாக முகத்தில் தெளித்துகொண்டால் போதும், தோல் உடனடியாக முழுமையாக புத்துயிர் பெறும்.