கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு (Dandruff). சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். தலை பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. அதிலும் குளிர்காலங்களில் இந்த பொடுகு பிரச்னை மிகவும் அதிகமாக காணப்படும். பொடுகு தொல்லை பல்வேறு காரணங்கள் வருகின்றன.
ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என முடியில் பொடுகு வர பல காரணங்கள் இருக்கின்றன. இதுவரை பொடுகு தொல்லை நீங்க பல்வேறு விஷயங்களை நீங்கள் முயற்சித்திருப்பீர்கள். ஆனால் நம் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே பொடுகு பிரச்சனையை போக்கிவிடலாம். அந்த வகையில் கீழ்காணும் சில ஈஸி டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க.
1. தேன் மற்றும் எலுமிச்சை கலவை : எலுமிச்சை ஒரு வலுவான சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. மேலும் தேன் ஒரு சிறந்த ஹுமெக்டான்டாக செயல்படுகிறது. 3 அல்லது 4 தேக்கரண்டி தேனைப் பயன்படுத்தி ஒரு ஹேர் மாஸ்க் தயார் செய்து அதனுடன் அரை எலுமிச்சை சாற்றை பிழிந்து உங்கள் உச்சந்தலையில் சமமாக தடவவும், அல்லது பொடுகு பாதிப்புக்குள்ளான பகுதியில் மட்டும் தடவவும். 15 நிமிட மென்மையாக மசாஜ் செய்த பிறகு தலைமுடியைக் தண்ணீரில் அலசுங்கள்.
2. தேங்காய் மற்றும் வேப்ப எண்ணெய் : தேங்காய் எண்ணெய் கிட்டத்தட்ட அனைத்து முடி பிரச்சினைகளுக்கும் ஒரு இயற்கையான ஆறுதல் ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில், தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம பாகங்களில் சேர்த்து உச்சந்தலையில் தடவிய பின் மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு ஒரு மைல்டு ஷாம்பூவுடன் உங்க தலை முடியை நன்கு அலசவும். வேம்பு மற்றும் தேங்காய் எண்ணெய்யின் நற்குணங்கள் உங்கள் தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
3. தயிர் : தயிர் என்பது குளிர்காலத்தில் பொடுகு போக்க ஒரு அவசியமான பொருள். தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து அதனை உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவில் தலையை அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் பொடுகு தொல்லை விரைவில் நீங்கும். தலை பொடுகு தவிர்க்க வேண்டுமானால் சூடான தண்ணீரில் தலைகுளிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்காலங்களில் உங்கள் தலைமுடியைக் அலசுவதற்கு மிதமான அளவே சூடாக இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.
இதுதவிர, வெந்தயத்தை அரைத்து அதனை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். அதேபோல, தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை கண்டிப்பாக நீங்கும். அடுத்ததாக வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் தலையை அலசுங்கள். இதுபோன்ற எண்ணற்ற இயற்கை வழிகள் மூலம் உங்கள் பொடுகு பிரச்சனையை தீர்க்கலாம்.