

ஸ்கின் ஃபாஸ்டிங் என்னும் விஷயம் சமீப நாட்களாக பிரபலமடைந்து வருகிறது. இதை கேட்பவர்கள் சிலருக்கு புதிய விஷயமாக உள்ளது. அவர்களுக்காகவே, சருமப் பராமரிப்பில் ஒரு அங்கமாக இருக்கும் இந்த ஸ்கின் ஃபாஸ்டிங் முறை குறித்த ஒரு பார்வைதான் இந்த கட்டுரை....


ஸ்கின் ஃபாஸ்டிங் என்பதை தமிழில் சரும விரதம் எனலாம். உடல்நலத்திற்காக விரதம் இருப்பது போல் சருமத்தின் ஆரோக்கியத்திற்காகவும் விரதம் இருக்கலாம். ஆனால் இந்த சரும விரததிற்கு அர்த்தம் சாப்பிடக்கூடாது என்பதல்ல..சருமத்தில் எதையும் பயன்படுத்தக் கூடாது என்பதே...


ஆம்...அதாவது அக்குபஞ்சர் , ஆயுர்வேத முறையில் பாஸ்டிங் இருந்தால் செரிமான உறுப்புகள் தேங்கியிருக்கும் கழிவுகளை மட்டும் வெளியேற்றுவிட்டு ஓய்வு எடுக்கும். இதனால் தேவையற்ற கொழுப்புகளும் சேராது. உடல்நலமும் ஆரோக்கியமாக இருக்கும். அதுபோல சருமத்தில் எந்தவித காஸ்மெடிக்ஸ் பொருட்களும் பயன்படுத்தாமல் அப்படியே ஒருநாள் முழுவதும் விடுவதால் சரும துவாரங்கள் நல்ல சுவாசம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.


இந்த ஃபாஸ்டிங் அனைவரும் செய்ய வேண்டுமா என்றால் முற்றிலும் இல்லை..தினமும் செய்யும் வேலைக்காகவோ அல்லது தேவைக்காகவோ ஹெவியான கிரீம், காஸ்மெடிக்ஸ் பொருட்கள், மேக்அப் பொருட்களை பயன்படுத்துவோர் வார விடுமுறை நாட்களில் ஸ்கின் ஃபாஸ்டிங் செய்யலாம்.


நீங்கள் மேக்அப் அல்லாமல் அதிக மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன் , கிரீம் மட்டும் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் இந்த ஸ்கின் ஃபாஸ்டிங் செய்யலாம். இந்த ஸ்கின் ஃபாஸ்டிங் முறையில் காலை எழுந்தது தொடங்கி இரவு தூங்கும் வரை முகம் கழுவுவதை தவிற முகத்திற்கு வேறு எந்த பொருளையும் அப்ளை செய்யக் கூடாது.


இதை வாரம் ஒருமுறை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. வேலை முடிந்து இரவு வீடு திரும்பியதும் கூட முகத்தை நல்ல கிளென்சர் கொண்டு சுத்தமாக கழுவிவிட்டு அப்படியே விடுவது நல்லது.


இவ்வாறு ஃபாஸ்டிங் இருப்பதால் தொடர் கிரீம்கள், ரசாயண பொருட்கள் சருமத்தை பாதிப்பதிலிருந்து தவிர்க்கலாம். சருமத்திற்கு மூச்சு விடுவதற்கான கால அவகாசம் கொடுப்பதாக இருக்கும்.