சருமப் பராமரிப்பு என்பது விலை உயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதில் மட்டுமே இல்லை. வீட்டிலேயே இருக்கும் பல பொருட்கள் சருமத்தை பொலிவாக, மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பழங்கள், பால், ரோஸ் வாட்டர், கடலை மாவு என்று பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி DIY மாஸ்க்குகளை செய்யலாம். வீட்டிலேயே நீங்கள் சுலபமாக செய்யக்கூடிய பல DIY மாஸ்க்குகள் உள்ளன. ஆனால், ஒரு சில பொருட்களை உங்கள் முகத்தில் பூசக்கூடாது.
எலுமிச்சை : சருமத்துக்கு தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்திருந்தாலும், எலுமிச்சையை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. பலருக்கும் எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சையின் உட்பகுதியை சருமத்தின் மீது பூசும் பழக்கம் உள்ளது. இது மிகவும் தவறானது. எலுமிச்சையில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி, சூரிய ஒளியால் தீவிரமான சரும பாதிப்பு ஏற்பட்டு, நிறம் மாறும். அது மட்டுமின்றி, எலுமிச்சை முகத்தில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும்.
வெஜிடபிள் ஆயில் : முகத்தில் மற்றும் சருமத்தில் எண்ணெய் பூசுவது என்பது காலம் காலமாக பழக்கத்தில் உள்ளது. ஒரு சில எண்ணெய்களை சருமத்தில் பூசக்கூடாது. சரும மருத்துவத்தில் வெஜிடபிள் ஆயிலின் பயன்பாடு என்ற ஆய்வுக்கட்டுரை 2017 ஆம் ஆண்டு, இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் டெர்மடாலஜியில் வெளியானது. சரும வெடிப்புகள், ரோசியா போன்ற சரும பாதிப்பு, லிசெனைடு டெர்மாடிட்டிஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இலவங்கப்பட்டை : ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த, உணவுக்கு சுவையும் மணமும் கூட்டும் மசாலாப் பொருட்களில் இலவங்கப்பட்டைக்கு தனி இடம் உள்ளது. ஆனால், எந்த விதமான DIY மாஸ்க்குகளிலும் நீங்கள் பட்டையை சேர்க்கக்கூடாது. இது, முகத்தில் எரிச்சல் சிவப்பு நிற திட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மெடிக்கல் நியூஸ் டுடேவில், ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்துவது, சருமத்தில் கெமிக்கல் பர்ன்ஸ் போன்ற தீவிரமாக சரும பாதிப்பை உண்டாக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது.
இதே போல, காரத்தன்மை கொண்ட பூண்டு போன்ற எந்த மசாலா பொருட்களையும் DIY மாஸ்க்கில் பயன்படுத்தக்கூடாது. மேலே குறிப்பிட்டுள்ள வீட்டில் இருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சரும ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவது குறுகிய கால விளைவுகளை ஏற்படுத்தும். UV கதிர்களில் முகத்தில் கொப்புளம், எரிச்சல் மற்றும் தொற்று பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.