முக அழகை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொள்வதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது தற்போது அனைத்துத் தரப்பட்ட பெண்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதோடு மட்டுமின்றி வீட்டிலேயே சில பேஸ் பேக்குகளைப் பயன்படுத்தியும் பெண்கள் தங்களது முகத்தை அழகாகக் காட்டுவதற்கு முயல்வார்கள். இதுபோன்ற மேற்கொள்பவர்களாக நீங்கள்? இனி எந்த சிரமமும் வேண்டாம் வீட்டில் உள்ள தேன் உள்ளிட்ட சில பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக்க முடியும் தெரியுமா?
ஆம் தேனில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பிரக்டோஸ், தாதுக்கள், அமிலங்கள் என முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தோடு சருமத்தையும் பாதுகாப்பதற்கு உதவியாக உள்ளது. எனவே இந்நேரத்தில் சரும பராமரிப்பில் தேன் என்னென்ன பலன்களைத் தருகிறது மற்றும் தேனைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் பேஸ் பேக்குகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…
தேனைப் பயன்படுத்தி செய்யப்படும் பேஸ் பேக்குகளின் விபரங்கள்…
பால் மற்றும் தேன் பேஸ் பேக் : முகப்பொலிவிற்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும் பேஸ் பேக்குகளில் ஒன்று தான் பால் மற்றும் தேன் பேஸ் பேக்.. இதை வீட்டிலேயே செய்வதற்கு முதலில் 2-3 தேக்கரண்டி பால் மற்றும் இதே அளவில் தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 15-20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் இதை அகற்றுவதற்கு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவும் போது முகம் பிரகாசமாக இருப்பதற்கு உதவியாக உள்ளது. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதுப்போன்று நீங்கள் செய்துப்பாருங்கள். நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தயிர் மற்றும் தேன் பேஸ் பேக் : முதலில் ஒரு பவுலில் தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரை தேக்கரண்டி தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ் பேக் கலவையை உங்களது முகம் அல்லது கழுத்துப் பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் நன்றாக மசாஜ் செய்யவும். பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவி விட வேண்டும். இதை நீங்கள் வாரத்திற்கு 2-3 நாள்களுக்கு செய்ய வேண்டும். இந்த பேஸ் பேக் வறண்ட சருமத்தை மிருதுவாக்க உதவியாக உள்ளது.
தேன் மற்றும் எலுமிச்சை பேஸ் பேக் : முகம் பிரகாசத்துடன் இருக்க தேன் மற்றும் எலுமிச்சை கலந்து பேஸ் பேக் மிகவும் உதவியாக இருக்கும். இதை செய்வதற்கு முதலில் நீங்கள் ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து உங்களது முகத்திற்கான பேஸ் பேக்கை தயார் செய்துவிடலாம்.
தேன், கற்றாழை மற்றும் இலவங்கப்பட்டை பேஸ் பேக் : ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை மற்றும் 1/4 ஸ்பூன் அரைத்த இலவங்கப்பட்டை ஆகியவற்றை நன்றாக கலக்கவும். பின்னர் முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து 5-10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இது முகத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.