எல்லா வயது பெண்களிடையேயும் மிகவும் பொதுவாக காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று உதட்டின் மேல் முடி வளருவது. இதுபோன்ற தேவையற்ற முடியை அகற்ற பெரும்பாலான பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்வதையே விரும்புகிறார்கள். ஆனால் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக , வீட்டை விட்டு வெளியே செல்வதை விட, முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற சில எளிதான முறைகளை வீட்டிலேயே பயன்படுத்துவது நல்லது. எனவே, எரிச்சலூட்டும் உங்கள் மேல் உதடு முடியை அகற்ற எளிய வழிகளை குறித்து பின்வருமாறு காண்போம்.
டீவீசர்: இது முடி அகற்றுவதற்கான பழைமையான மற்றும் பயனுள்ள ஒரு வழியாகும். மேலும் உதடு முடியை அகற்றுவதற்கு இது சரியான தீர்வாக இருக்கும். இதனை பிளக்கர் என்றும் சொல்லுவார்கள். இதனை வைத்து ஒரு நேரத்தில் ஒரு முடியை மட்டுமே வேரிலிருந்து பிடிங்கி எடுக்க முடியும். இந்த செயல்முறைக்கு நீங்கள் ஒரு சுத்தமான ஜோடி டீவீசரை பயன்படுத்த வேண்டும். முடிகளை அகற்றிய பிறகு உங்கள் மேல் உதட்டை குளிர்ந்த நீரில் கழுவவும். ஏனெனில் முடிய பிடிங்கி எடுக்கும் செயல்முறை சற்று வலி மிகுந்ததாக இருக்கும்.
வாக்ஸிங்: மேல் உதடு ஒரு முக்கியமான பகுதி என்பதால், உங்கள் சருமத்திற்கு ஏற்ற நல்ல தரமான வாக்ஸிங் ஒன்றைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த செயல்முறை சற்று வேதனையாக இருந்தாலும், அது நிச்சயமாக உங்களுக்கு நீண்ட கால முடிவுகளை வழங்கும். மேல் உதட்டில் இருக்கும் முடிகளை அகற்ற நீங்கள் அந்த குறிப்பிட்ட இடத்தில் சூடான மெழுகினை பூச வேண்டும். பின்னர் ஒரு சிறிய மெழுகு துண்டை கொண்டு மேல் உதட்டில் தடவிய மெழுகினை நன்கு அழுந்த வேண்டும். பிறகு மேல் உதட்டில் தடவிய மெழுகினை அகற்றவும். அதனுடன் மேல் உதடு முடிகளும் வந்துவிடும்.
ரேஸர் : முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற இது ஒரு தொந்தரவு இல்லாத சிறந்த வழியாகும். நேரத்தையும் சேமிப்பதோடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சருமத்தின் முக்கிய பகுதிகளில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றுவதில் ஒப்பீட்டளவில் மற்ற வழிகளை விட இது குறைவான வலி உடையதாக இருக்கும். மேல் உதட்டில் இருந்து முடியை அகற்றுவதற்கு பெரிய ரேசரை விட சிறிய ரேஸரைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் இது தேவையற்ற முடியை அகற்றுவதற்கான ஒரு தற்காலிக வழி மட்டுமே. முடியை அகற்ற விரும்பும் குறிப்பிட்ட பகுதியில் ஷேவிங் ஜெல், சோப் அல்லது கிரீம் தடவி பின்னர் சுத்தமான ரேஸரைப் பயன்படுத்தி ஷேவ் செய்யுங்கள்.
முடி அகற்றும் இயந்திரங்கள்: அதேபோல முடி அகற்றும் இயந்திரங்களும் கடைகளில் கிடைக்கின்றன. உங்கள் மேல் உதடு முடி மட்டுமல்ல, அவை உங்கள் உடலின் மற்ற பகுதிகளிலிருந்தும் முடிகளை அகற்ற உதவுகின்றன. அவை உங்களுக்கு சுத்தமான மற்றும் மென்மையான தோற்றத்தை தருகின்றன. நேர்த்தியான டிரிம்மர்கள் உங்கள் புருவங்கள் மற்றும் மேல் உதடு முடிகளை எடுக்க உகந்தவை.
தேன், கடலைமாவு மற்றும் அரிசி மாவு: மேற்கண்ட அனைத்தையும் விட, வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே முடிகளை அகற்றலாம். தேன், கடலை மாவு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் தடவி 10 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள். இந்த செய்முறையால் உங்கள் முடி மெல்லியதாகிறது. பின்னர் நாளடைவில் வளர்ச்சியை நிறுத்தி விடும்.