வயது ஏற ஏற கருமையான முடி வெள்ளை நிறமாக மாறுவது இயல்பான ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு வரை 40 அல்லது 45 வயது மேற்பட்டவர்களுக்கு மெல்ல மெல்ல தலைமுடி, மீசை மற்றும் தாடி முடிகள் நரைத்து வெள்ளையாக மாறின. இது அவர்களுக்கு வயதுக்கேற்ற மிடுக்கை தந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக டீனேஜ் வயதில் இருக்கும் ஆண், பெண் என இருபாலருக்குமே நரைமுடி பிரச்னை தலைதூக்கி காணப்படுகிறது.
தவிர பள்ளி செல்லும் சில குழந்தைகளின் தலைமுடி முழுவதும் நரைத்து காணப்படுவதை கூட சில இடங்களில் காணமுடிகிறது. இந்த நரைமுடி பிரச்சனை இளம் குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. ஒரு சில பெற்றோர் தங்களது சிறுகுழந்தைகளுக்கு உதாரணமாக 5 வயது குழந்தைகளுக்கு கூட தலைமுடி வெள்ளை நிறமாக மாறியுள்ளதாக கவலை தெரிவித்து, அதற்கு சிகிச்சை தேடி வரும் நிலை காணப்படுகிறது.
நமது முழு தோற்றத்தினை சிறப்பாக எடுத்து காட்டுவதில் முடி முக்கியமான பங்கு வகிக்கிறது. வயது காரணமாக தலைமுடி நரைத்தால் சாதாரண நிகழ்வாக கடந்து சென்று விட முடியும். அதுவே மேலே குறிப்பிட்டது போல மிக இளம் வயது மற்றும் இளவயதில் முடி நரைக்க துவங்குவது கவலைக்குரிய விஷயமாகவே இருக்கும். இளம் வயதிலேயே முடி நரைக்க நாம் பொதுவாக பின்பற்றி வரும் சில பழக்கவழக்கங்களும் காரணமாக அமைகின்றன.
மன அழுத்தம்: இளம் வயதினராக இருந்தாலும் கூட நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை காரணமாக ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தை எதிர் கொண்டு வருகின்றனர். நாட்பட்ட மன அழுத்த பிரச்சனையானது, தூக்கமின்மை, பதற்றம், பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேற்காணும் சிக்கல்கள் அனைத்தும் நம் முடி வளர்ச்சி மற்றும் முடியின் நிறம் உள்ளிட்டவற்றில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிக மனஅழுத்தம் நரைமுடி பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் அதை கையாள தியானம், யோகா உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு மனதை அமைதியாக வைத்திருக்கலாம்.
தலைக்கு எண்ணெய் : தலை முடிக்கு தவறாமல் எண்ணெய் வைப்பது உடலின் சிபேசியஸ் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் சிபம் என்ற மெழுகு போன்ற பொருளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பது நமது உச்சந்தலை வறண்டு போகாமலும், அரிப்பு ஏற்படாமலும் தடுக்கிறது. வாரத்திற்கு ஓரிரு முறை தலைக்கு தடவும் எண்ணெயை மிதமான சூட்டில் உச்சந்தலை மற்றும் தலை முடியின் வேர்க்கால்களில் படும்படி ஆயில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான முடியை பராமரிக்கிறது. முடிக்கு தவறால் எண்ணெயை வைக்கும் போது, முடி விரைவில் நரைப்பது குறைகிறது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பது : வெயிலில் அதிக நேரம் அலைவது மற்றும் வெயிலில் நீண்ட நேரம் நிற்கும் வேலைகளில் ஈடுபடுவது தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மட்டுமல்ல முடிக்கும் சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் அதன் காரணமாக உலர்ந்த மற்றும் நரை முடி உருவாகும். எனவே சூரிய ஒளியில் அதிக நேரம் இருக்க நேரிட்டால் குடை எடுத்துச்செல்வது போன்ற வேறு சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நலம்.
கெமிக்கல் தயாரிப்புகள்: இளம் தலைமுறயினருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் ஹேர் ஸ்டைலிங் தலைமுடி சேதமடைய காரணமாக இருக்கின்றன. கெமிக்கல் கலந்திருக்கும் ஹேர் கலரிங் உள்ளிட்ட ப்ராடக்ட்களை பயன்படுத்துவதால் தலைமுடி சேதமடைந்து முடி நரைத்து விடுகிறது. கூடுமானவரை இயற்கையான முடி கலரை மெயின்டெயின் செய்வது தலைமுடி சேதங்களை தவிர்க்க உதவும். இவை தவிர நாம் பின்பற்றும் உணவு முறையில் போதுமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். சிறந்த முடி ஆரோக்கியம் வேண்டும் என்றால் தினசரிபோதுமான அளவு தண்ணீர், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.