மாதவிலக்கு காலத்தில் பெண்களின் உடலில் ஹார்மோன் சுரப்பு மிகுதியாக இருக்கும் மற்றும் எண்ணெய் உற்பத்தியும் அதிகரிக்கும். இதன் காரணமாக சருமத்தில் பருக்கள் வெடித்து வெளிக்கிளம்பி வரும். இது இயல்பான உடல் மாற்றம் தான் என்றாலும் கூட நமக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதாகவும், நம்முடைய அழகான தோற்றத்தை மட்டுப்படுத்தக் கூடியதாகவும் அமையும்.
இந்நிலையில், பருக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக சரும பாதுகாப்பு நிபுணரும், மருத்துவருமான ஷாணான் குர்திஸ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். மாதவிலக்கு காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பருக்கள் வெடித்து வெளியேறினாலும், அதை கட்டுப்படுத்துவதற்கான டிப்ஸ் சிலவற்றை அவர் பகிர்ந்துள்ளார்.
மது அருந்துவதை குறைக்க வேண்டும் : இந்திய பெண்கள் பெரும்பாலும் மது அருந்துவது கிடையாது என்றாலும் மேற்குலக நாடுகளின் பெண்கள் பலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. மது அருந்தும்போது கல்லீரலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி சீரற்ற நிலையில் இருக்கும். அதன் எதிரொலியாக பருக்கள் கிளம்பும். ஆகவே, மாதவிலக்கு காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
புரோஜெஸ்டிரோன் அளவு கட்டுப்பாடு : உடலில் புரோஜெஸ்டிரோன் அளவுகள் குறையும் பட்சத்தில் அதன் காரணமாக செபம் அளவுகள் அதிகரிக்கும். இது பருக்களை உண்டாக்கும். இதை தடுக்க வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ஜிங்க், மெக்னீசியம் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும். உதாரணத்திற்கு நெல்லிக்காய் மற்றும் கொய்யா ஆகியவற்றில் வைட்டமின் சி மிகுதியாக கிடைக்கும்.
மன அழுத்தம் குறைய வேண்டும் : மன அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக புரோஜெஸ்டிரோன் அளவுகள் குறைகின்றன. இதனால் மெட்டபாலிச நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இறுதியாக பருக்கள் உருவாகின்றன. இந்த சமயத்தில் யோகா, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதன் மூலமாக உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இடுப்பு பகுதிக்கு பயிற்சி கொடுப்பது : இடுப்பு பகுதி அசைவின்றி இருந்தால் புரோஜெஸ்டிரோன் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் மாதவிலக்கு காலத்தில் ஆரோக்கியம் தடைபடும். ஆகவே, இடுப்பு பகுதிக்கு அசைவு கொடுக்கும் வகையிலான பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒரே இடத்தில் முடங்கி கிடக்கக் கூடாது. வயிற்று பகுதியில் மசாஜ் செய்யலாம்.
உடல் சொல்வதை கவனிக்கவும் : உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவுகள் வெகுவாக குறைகின்றன என்பதை நம் உடலின் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த சமயத்தில் நாம் அன்றாட பணிகளில் கவனம் செலுத்தாமல், மனம் விட்டு பேசுவதற்கு பிடிக்காமல் இருப்போம். இதை உணர்ந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.