சரும பிரச்சனைகள் பல உண்டாகினாலும் அவற்றை சரியான முறையில் கையாண்டாலே குணமாக்கிட முடியும். ஆனால், இன்றைய வாழ்க்கை சூழலில் நமது சருமத்தை பாதுகாக்க நாம் போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை. மேலும் நாம் பயன்படுத்த கூடிய மோசமான கெமிக்கல் நிறைந்த புராடக்ட்கள் அனைத்துமே சருமத்தை மேலும் பாதிக்க கூடியவையாக உள்ளன. இப்படி பல வித சரும பாதிப்புகளை எளிதாக தீர்க்க வீட்டில் இருக்க கூடிய சில உணவு பொருட்களே போதும். அந்த வகையில் சரும அழகை பராமரிக்க பாகற்காய் மிகவும் உதவுகிறது. இதை பற்றிய முழு தகவலையும் இனி தெரிந்து கொள்வோம்.
பாகற்காய் : பாகற்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இது ஆரோக்கியமான சரும செல்களை ஊக்குவிக்கும், மற்றும் முன்கூட்டிய தோல் வயதாவதை தடுக்கும். மேலும் முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது. அத்துடன் இது முகப்பருவைக் குறைக்கவும், தோலழற்சிக்கு சிகிச்சையாகவும் உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்கிறது.
ஸ்கிரப் : சருமத்தில் அழுக்கு மற்றும் எண்ணெய் அதிகம் சேரும் போது, இந்த பாகற்காய் மற்றும் வெள்ளரி காய் ஃபேஸ் ஸ்க்ரப்பை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த ஹைட்ரேட்டிங் ஸ்க்ரப் செய்வதற்கு உங்களுக்கு தேவையானது ஒரு டீஸ்பூன் பாகற்காய் சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவை தான். அடுத்து இவை இரண்டையும் நன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் தடவி சிறிது நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும். இப்படி ஸ்கிரப் செய்த பிறகு, உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவி, உலர்ந்த பிறகு டவலால் மெதுவாக துடைக்கவும். இந்த ஸ்கிரப் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மென்மையான சருமத்திற்கு : இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், மிருதுவாகவும், மென்மையாகவும் வைக்க உதவும். இதற்கு 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 3-4 பாகற்காய் துண்டுகள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
பருக்களை தடுக்க.. மஞ்சள் மற்றும் வேம்பில் முகப்பருவைத் தடுக்க கூடிய முக்கிய மூலப்பொருட்கள் உள்ளன. எனவே இவற்றை பேஸ் பேக் போன்று தயாரித்து முகத்தில் தடவினால் பருக்களில் இருந்து விடுபடலாம். ஒரு சில வேப்பங்கொழுந்து இலைகளை எடுத்து கொண்டு, அதை ஒரு துளி மஞ்சள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் சருமத்தில் காட்டன் பேட் மூலம் தடவவும். சுமார் 10-15 நிமிடங்கள் உலர விட்டு பிறகு கழுவவும்.
பொலிவான சருமத்திற்கு. நீங்கள் மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பினால், இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கானது. இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க, ஒரு கைப்பிடி வேப்பிலை மற்றும் துளசி இலைகளை எடுத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாகற்காய் மற்றும் 1 டீஸ்பூன் பால் ஆகியவற்றை இவற்றுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் உலர விடவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இப்படி செய்து வந்தால் உங்கள் முகம் மிக விரைவிலேயே பொலிவு பெறும்.