வைட்டமின் ஈ ஒரு ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படுகிறது, உடல் முழுவதும் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் பல தோல் பராமரிப்பு நன்மைகளைக் கொண்ட ஒரு அதிசய வைட்டமின் ஆகும். மேலும் இது சருமத்தை அசுத்தங்களிலிருந்து பாதுகாக்கிறது, ஃப்ரீ ரேடிக்கல்ஸை நியூட்ரலைஸாக்குகிறது மேலும் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. மேலும் இது குறிப்பிடத்தக்க ஆன்டி-ஏஜிங் பண்புகளை வழங்குகிறது. வைட்டமின் ஈ ஆயில் முகத்திற்கு இயற்கையான பொலிவை தருவதாக கூறப்படுகிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து, பளபளப்பான, ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்கும் வைட்டமின் ஈ-யை பயன்படுத்துவதற்கான வெவ்வேறு வழிகளை இங்கே பார்க்கலாம்.
மாய்ஸ்சரைசரில் சேர்க்கலாம் : உங்கள் வழக்கமான மாய்ஸ்சரைசரில் சேர்க்கப்படும் வைட்டமின் ஈ, உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஹைட்ரேஷனை அளித்து, மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். மேலும் சரும எரிச்சலை கட்டுப்படுத்துகிறது. இதன் ஆன்டிஆக்சிஜன் பண்பு தோல் தடுப்பு செயல்பாட்டை பலப்படுத்துகிறது. நல்ல ஆரோக்கியமான சருமத்திற்கு உங்கள் மாய்ஸ்சரைசரை எப்போதெல்லாம் பயன்படுத்துகிறீர்களா அப்போதெல்லாம் மூன்று முதல் நான்கு சொட்டு வைட்டமின் ஈ எண்ணெய்யை அதில் சேர்க்கவும். உங்கள் ஸ்கின் டோனர் மற்றும் சீரம் பயன்படுத்திய பிறகு தினமும் இதை பயன்படுத்துவதால் சிறப்பான பலனை பெறலாம்.
அன்டர் ஐ கிரீமாக (Under-Eye Cream) பயன்படுத்துங்கள்: கொலாஜன்-ப்ரொடக்டிங் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வைட்டமின் ஈ-யில் அதிகம் உள்ளது. இது கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் மெல்லிய சுருக்கங்களைப் போக்க பயன்படுகிறது. கொலாஜனை மீட்டெடுக்கும் மற்றும் கரும்புள்ளிகளை மறைய செய்யும். வைட்டமின் ஈ மற்றும் ஜோஜோபா எண்ணெயை (jojoba oil) கலக்கவும். இந்த எண்ணெய் கலவையை கொண்டு கண்களுக்குக் கீழே உள்ள பகுதியில் மசாஜ் செய்து, மறுநாள் காலை வரை விட்டு விடுங்கள். ஊட்டமளிக்கும் சருமத்திற்கு இந்த டிப்ஸ் பெரிதும் உதவும்.
நகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்: உங்களது நகங்கள் பலவீனமாக மற்றும் எளிதில் உடைய கூடியதாக இருந்தால், வைட்டமின் ஈ ஆயிலை வீட்டில் வைத்து உங்கள் நகங்களை ஆரோக்கியமாக்கலாம். எனவே இரவு தூங்க செல்வதற்கு முன் உங்கள் விரல்கள் உட்பட நகங்களில் வைட்டமின் ஈ எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யவும். இந்த பழக்கம் உங்கள் சேதமடைந்த நகங்களை சரிசெய்து, நகத்தை ஆரோக்கியமாக்குகிறது.
கூந்தல் வளர்ச்சி : மாசு, சுற்றுச்சூழல் மற்றும் அதிக சூரிய வெளிச்சம் போன்றவற்றால் முடி தொடர்ந்து சேதமடைகின்றன, இதன் விளைவாக அதிக கூந்தல் உடைவது, சேதமடைவது, நிறமாற்றம், கரடுமுரடான தன்மை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வைட்டமின் ஈ உச்சந்தலையில் நுண்குழாய் சுழற்சியை (capillary circulation) அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வைட்டமின் ஈ ஆயிலை கொண்டு உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள். பின் அகலமான பல் கொண்ட சீப்பினால் மெதுவாக சீவுங்கள். குறைந்தது 15 நிமிடங்கள் ஆயில் ஊறட்டும். உங்கள் தலைமுடியில் உள்ள வைட்டமின் ஈ எண்ணெயை அகற்ற உங்கள் வழக்கமான ஷாம்புவை பயன்படுத்துங்கள்.
ஃபேஸ் மாஸ்க்கில் சேருங்கள் : உங்கள் சருமம் ஆரோக்கியமாக மற்றும் பொலிவாக இருக்க வைட்டமின் ஈ ஆயில் கொண்ட ஃபேஸ் மாஸ்க் தயார் செய்து பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து ஊட்டமளிக்கும். முல்தானி மிட்டி மற்றும் ஒயிட் மலாய் உள்ளிட்டவற்றுடன் 5 முதல் 8 துளிகள் வைட்டமின் ஈ ஆயிலை கலந்து அதை முகம் முழுவதும் தடவி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.