நமது சருமம் ஆனது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே இருக்கும். இது பலருக்கும் அசௌகரியத்தை உண்டாக்குகிறது. சருமம் எப்பொழுதும் பொலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு க்ரீம், பவுடர் போன்றவைகளை பயன்படுத்துகிறோம். இவற்றில் எந்த அளவுக்கு பலன் கிடைக்கிறது? என்றால், பெரிதாக மாற்றம் இல்லை என்பதுதான் பலரின் பதிலாக இருக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சித்த மற்றும் ஆயுர்வேத முறைகளில் பல்வேறு எண்ணெய்கள் பயன்படுத்தி உடலின் நோய்களை குணப்படுத்தினார்கள். உடல் சருமத்திற்கும் பல்வேறு எண்ணெய்களை அக்காலத்தில் பயன்படுத்தி உள்ளார்கள். நாளடைவில் அப்பழக்கம் மெல்ல மெல்ல அழிந்து தற்போது, சந்தையில் விற்கக்கூடிய பல்வேறு நம்பகமில்லாத பொருட்களை பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய்கள் நமது சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. எண்ணெய்கள் நமது உடலில் சருமத்தில் உள்ள முகப்பரு வடுக்கள் முதல் சுருக்கங்கள் வரை அனைத்தையும் குணப்படுத்தும். எண்ணெய்யுடன், மாய்ஸ்சரைசரில் சில துளிகள் கலந்து பயன்படுத்தினால் சருமம் அழகாகும். சரியான எண்ணெய்களை அளவாக பயன்படுத்துதல் அவசியம் ஆகும். நிர்மலயா நிறுவனத்தை சேர்ந்த சுர்பி பன்சால் சருமத்திற்கு தேவைப்படும் எண்ணெய்களை பற்றி விளக்குகிறார். அதை பற்றி இங்கு பார்க்கலாம்.,
ஆர்கன் எண்ணெய் :சருமத்தை பாதுகாக்க எண்ணெய்கள் முக்கியமான பங்கை வகிக்கின்றது. ஆக்ஸிஜனேற்றம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது ‘ஆர்கன் எண்ணெய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், ஊட்டத்தையும் தருகிறது. சருமம் வறட்சியடைந்தாலோ அல்லது சுருக்கங்களால் பாதிக்கப்பட்டாலோ இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த ஆர்கன் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்களின் கலவையானது சருமத்தில் உள்ள துளிகளால் உறிஞ்சப்படுவதால், சருமம் பொலிவாக இருக்கும்.
சிடார்வுட் ஆர்கானிக் எண்ணெய் : முகப்பருவை போக்க ‘சிடார்வுட் ஆர்கானிக் எண்ணெய்’ பயன்படுகிறது. இந்த எண்ணெயை முகத்தில் உள்ள பருக்களில் மாய்ஸ்சுரைசர் ஆகியவற்றுடன் தடவும் போது, அந்த பருக்களை எளிதில் போக்குகிறது. உங்களுக்கு முகப்பருக்கள் அதிகம் இருக்கிறதா, இதனை பயன்படுத்தி எளிதில் விரைவாக குணப்படுத்தலாம்.
வெட்டிவேர் எண்ணெய் : காற்று மற்றும் தூசியினால் சருமம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ‘வெட்டிவேர்’ எண்ணெயை பயன்படுத்தலாம். சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளை போக்குவதில் வெட்டிவேரின் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெட்டி வேர் எண்ணெய்யுடன் சிறிதளவு நீர் சேர்த்து சருமத்தில் அப்ளை செய்து வந்தால், முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் வடுக்களை நீக்க முடியும். இது முகத்தில் உள்ள சருமம் இளமையாக தோற்றத்தை தக்கவைத்து கொள்ளவும் உதவுகிறது.
அத்தியாவசிய எண்ணெய் கலவைகள் : அத்தியாவசிய எண்ணெய் என்பது பல்வேறு மருத்துவ பொருட்களின் கலவையாகும். கிராம்பு, இலவங்கப்பட்டை பட்டை, யூகலிப்டஸ், ரோஸ்மேரி மற்றும் எலுமிச்சை போன்றவைகள் இதில் உள்ளது. இந்த எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்துவதால் தோலின் மேற்பரப்பில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா அல்லது பூஞ்சைகளை அகற்ற முடியும்.
பெப்பர்மிண்ட் எண்ணெய் : பெப்பர்மிண்ட் எண்ணெய் ஆனது உடலின் தசை மற்றும் மூட்டு வழிகளை போக்க கூடியது கூடியது ஆகும். இந்த எண்ணெய் ப்ரூரிட்டஸ் எனப்படும் தோல் தீவிரத்தை குறைக்கிறது. மேலும் தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை கட்டுப்படுத்துகிறது. பெப்பர்மிண்ட் எண்ணெயை சுவாசிப்பதால் மன அழுத்தத்தையும், மன சோர்வையும் குறைக்கலாம்.
லாவெண்டர் எண்ணெய் : லாவெண்டர் எண்ணெய் சருமத்தை பாதுகாக்கிறது. இந்த எண்ணெய் மென்மையானது மற்றும் சருமத்திற்கு ஊட்டமும் அளிக்கிறது. லாவெண்டர் எண்ணெய் சருமத்தில் உள்ள தழும்புகளின் தோற்றத்தை குறைத்து பொலிவை தருகிறது. தோல் எரிச்சல் மற்றும் தீக்காயங்களுக்கு மிக சிறந்த மருந்தாகவும் லாவெண்டர் எண்ணெய் செயல்படுகிறது.