தலை முடி பற்றிய கவலை இன்றைய நாளில் அதிகமாகி கொண்டே வருகிறது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கும் முடி பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. முடி உதிர்வு, பொடுகு, முடி உடைதல், வெள்ளை முடி போன்ற ஏராளமான முடி சார்ந்த பாதிப்புகள் உள்ளன. இன்றைய வாழ்க்கை சூழல் தான் இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனால், 90'ஸ் கிட்ஸ்களுக்கு இது போன்ற முடி சார்ந்த பிரச்சனைகள் மிகவும் குறைவு தான். எப்படி 90'களில் பிறந்தவர்களுக்கு முடி ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
எண்ணெய் : முடியின் ஆரோக்கியத்திற்கு எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மாசு மற்றும் வானிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சியை சமாளிக்க உதவுகிறது. குறிப்பாக தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே, உங்கள் தலை முடியின் பளபளப்பைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது எண்ணெய் தடவுவதுதான் நல்லது. இதை தான் 90'ஸ் கிட்ஸ் பலர் செய்து வந்த முக்கிய விஷயமாகும்.
தலை சீவுதல் : படுக்கைக்கு முன் உங்கள் தலைமுடியை சீவுவதால், சிக்கலான முடிகளை நீக்குவதற்கு உதவும். இதைச் செய்யாவிட்டால், இந்த சிக்கலான முடிகள் உடைந்து முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். முடியைத் சீவுவதற்கு இயற்கையான முடி எண்ணெய்களை உச்சந்தலையில் வேர்கள் முதல் முனைகள் வரை தடவி சீவலாம். மேலும் பகலில் உங்கள் தலைமுடியில் தூசி துகள்களை அகற்றவும் இது உதவுகிறது.
கொண்டை போடுதல் : தலையை பின்னி போடுவதும், கொண்டை போடுவதும் 90'களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. பின்னல் போடுவதால் முடியை சரியான இடத்தில் வைக்க உதவுகிறது. நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அல்லது எந்தவொரு கடினமான செயலையும் மேற்கொள்வதற்கு முன் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முடிக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களையும் குறைக்க பின்னல் உதவுகிறது. குறிப்பாக வெயில் காலங்களில் உங்கள் தலைமுடியை பின்னி போடுவதால், இது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கப்படுவதோடு உங்கள் கழுத்துப் பகுதியையும் சுதந்திரமாகவும் குளிர்ச்சியாகவும் வைக்கும். மேலும் இது உங்கள் தலைமுடிக்கு சேதம் ஏற்படாமல் இருக்கவும் உதவும்.
ஷாம்பு : நெல்லிக்காய், செம்பருத்தி மற்றும் சீகைக்காய் போன்ற மூலிகைப் பொருட்களை கலவைகளாக அரைத்து 'பாரம்பரிய ஷாம்பு'வாகப் பயன்படுத்தி வந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும். இதை தான் 90'களில் பிறந்தவர்கள் பின்பற்றி வந்தனர். முடி பராமரிப்பில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் அதிகமான உள்ளது என்று மக்கள் உணர்ந்ததால் தற்போது பலரும் ஆயுர்வேத மூலப்பொருட்கள் நிறைந்த ஷாம்புக்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சல்பேட், சிலிகான் இல்லாத ஷாப்பூ-களையும் பயன்படுத்துவதும் நல்லது.
மசாஜ் : வேலை அழுத்தம் அல்லது மற்ற பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்தலுக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்வது இந்த பிரச்சனையை முற்றிலும் போக்க உதவும், மேலும் இதனால் நீங்கள் மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள். வாரத்தில் குறைந்தது நான்கு முதல் ஐந்து முறை உச்சந்தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது நல்லது. இந்த 90'ஸ் கிட்ஸ்களின் முடி பராமரிப்பு ரகசியங்களைப் பின்பற்றி, அடர்த்தியான முடியை அடைய முயற்சி செய்யுங்கள்.