தக்காளியை பார்க்க எப்படி அழகா இருக்கிறதோ அதேபோல நம்மை ஆரோக்கியமாக்குவதற்கும், அழகுகாக்குவதற்குமான தன்மைகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தக்காளியில் இருக்கும் லைகோபீன் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக் கூடியது. அதே லைகோபின் உங்கள் சருமம் முதிர்ச்சியடையாமல் காக்கிறது. தக்காளியில் உள்ள புரதம், மினரல் மற்றும் நார்ச்சத்துக்கள் சரும மற்றும் கூந்தல் அழகிற்கு அவசியாமனதாகிறது. தக்காளியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன அழகு நன்மைகளை பெறலாம் என்று இங்கே காண்போம்.
சரும முதிர்வை நீக்க : இன்றைய பொதுவான பிரச்சினை என்னவென்றால் பலரும் தாங்கள் உடனே அழகாகி விட வேண்டும், வெள்ளையாகி விட வேண்டும் என்ற எண்ணத்தால் டிவியில் வரும் விளம்பரங்களை பார்த்து அதில் வரும் தயாரிப்புகளை பயன்படுத்தி தங்கள் முகத்தை பாழாக்கி வருகின்றனர். பல தயாரிப்புகளை பயன்படுத்திய பின்னர் முகம் வயதானவர்களை போல் காட்சியளிக்கிறது. இதற்கு ஒரு சிறந்த வழி என்னவென்றால் தக்காளி தான்.
முகப்பரு மற்றும் சரும துளைகள்: பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளி சாற்றை முகத்தில் தடவி வந்தால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும். சருமமும் அழகாகும். தக்காளியை மிக்ஸியில் மைய அரைத்து மசித்து அதனுடன் மூன்று டீஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை பருக்களால் குழிகளாக இருக்கும் சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் காயவைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் முகத்தில் இருக்கும் குழிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.
சரும கருமை நீங்க : நீங்கள் வெயிலில் அதிகம் சுற்றுவதால் உங்கள் சருமம் கருமையடைந்துள்ளதா? அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே கருமை நிறம் அடர்ந்து தென்படுவதுண்டு. ஒரு சிலருக்கு இவை நன்றாக தெரியும் அவர்கள் தக்காளி துண்டுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி ஃபேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் இப்போது முகம் பளிச்சென்று இருக்கும். அதோடுகூட முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.
எண்ணெய் பசை நீங்க: ஒரு சிலருக்கு முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இதனை போக்க செயற்கை முறையில் கிடைக்கும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் தக்காளியை பயன்படுத்தினால் நீண்ட மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத சருமம் உங்களுக்கு கிடைக்கும். எண்ணெய் பசை நீங்க தக்காளியில் கடலை மாவு அல்லது சிறிது முல்தானி மிட்டி சேர்த்து தினமும் முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் நல்ல பலனை பெற முடியும் என்பதை ட்ரை செய்து நீங்களே அறியலாம்.
பொதுவாக நீங்கள் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சோப் பயன்படுத்தாமல், ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கும் சருமம் ஜொலி ஜொலிக்கும். தக்காளிக்கு இதுபோன்ற பல்வேறு நன்மைகள் உள்ளது எனவே சருமத்தை ஆரோக்கியமாக்க மேற்சொன்ன குறிப்புகளை பின்பற்றி உங்களை நீங்களே அழகாக்குங்கள்.