முதுமை என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு இயற்கையான நடைமுறையாகும். முதுமையை தடுக்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான், ஆனால் அதனை தள்ளி போட முடியும். நம் சருமம் இளமையாக இருக்க சில கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. நல்ல ஆரோக்கியமான உணவு, சரியான நேரம் தூக்கம் மற்றும் தோல் பராமரிப்பு முறையை நாம் சரியாக பின்பற்றினால் நாம் இளமையான சருமத்தை எளிதில் பெற முடியும். வயதான தோற்றத்தை தடுக்க உதவும் சில சிறந்த டிப்ஸ்கள் குறித்து இங்கு காண்போம்.
சன்ஸ்கிரீன் : சன்ஸ்கிரீன் இளமையை தக்க வைத்துக்கொள்ள சிறந்த ஒன்றாகும். இது சூரிய புறஊதா கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. அதிகமாக வெயில் படும்படி இருந்தால் நமது சருமம் எளிதில் வயதானது போல தோற்றத்தை பெறும். மேலும் சருமத்தில் கரும்புள்ளிகள், சுருக்கங்களையும் ஏற்படுத்தும். எனவே வயதான அறிகுறிகளை தடுக்க குறைந்தபட்சம் SPF 30 உள்ள சன்ஸ்கிரீனை வாங்கி பயன்படுத்துவது அனைவருக்கும் நல்லது. ஜெல், கிரீம் என இரண்டு வகைகளில் கிடைப்பதால் உங்கள் சருமத்திற்கு ஏற்றத்தை வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் வெயிலில் செல்ல நேரிடால் உடல் முழுவதும் கவர் செய்யும் வகையான ஆடைகளை அணிந்து செல்லுங்கள், அதேபோல தொப்பிகள் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
நல்ல தூக்கம் : நாம் தூங்கும்போது நமது உடல் சீராக இருக்கிறது. குறிப்பாக நல்ல தூக்கத்தில் இருக்கும் போது, உங்கள் சருமத்தின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்குகிறது. ஒருவர் தினமும் ஏறக்குறைய ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்குவது மிகவும் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மன அழுத்தம், கவலை போன்றவை தூக்கமின்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால் நீங்கள் எப்போதும் ரிலாக்ஸாக இருக்க கற்று கொள்ளுங்கள். தூக்கமின்மையால் சருமம் மிகவும் சோர்வாக மாறி நாளடைவில் வயதான தோற்றத்தை பெறும். எனவே போதுமான தூக்கம் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகை பராமரிக்கவும் முக்கிய பங்காற்றுகிறது.
ஆரோக்கியமான உணவு : வயதான அறிகுறிகளைத் தவிர்க்க நினைத்தால் நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆக்ஸிஜனேற்றி பண்புகள் நிறைந்த உணவுகள் சருமத்தின் அழகை பாதுகாக்கிறது, மேலும் இளமையை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. இதற்கு பச்சை இலை காய்கறிகள், ப்ரோக்கோலி, கேரட் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மாதுளை போன்ற பழங்கள், நெல்லி, வெண்ணெய் போன்றவற்றை சாப்பிடுங்கள். மேலும் உங்கள் உணவில் பச்சை தேயிலை மற்றும் ஆலிவ் எண்ணெயையும் சேர்க்கலாம்.
நீரேற்றம் : இளமையான சருமத்தை பெற வேண்டும் என்றால் எப்போதும் நீரேற்றமாக இருப்பது அவசியம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். அவ்வப்போது இளநீர், ஜூஸ்களை அருந்தலாம். மேலும் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், மெல்லிய கோடுகளையும் குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏ நிறைந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இவை உங்கள் மாய்ஸ்சரைசரில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மேக்கப் பொருட்களில் கவனம் : வயதான அறிகுறிகளை தடுக்க நீங்கள் பயன்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் கூடுதல் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் மேக்அப் பொருட்களில் என்னென்ன கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது என்பதை சரி பார்த்து வாங்குங்கள். அதிக நச்சுதன்மை கொண்ட கெமிக்கல்கள் நிறைந்துள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். கற்றாழை ஜெல், மஞ்சள், சந்தனம் கொண்டு தயார் செய்யப்படு இயற்கை சார்த்த பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தில் உள்ள கருமையை நீக்கி சருமத்தை பொலிவாக்கும். மேலும் உங்கள் சருமத்தை என்றும் இளமையாகவும், பிரகாசமாகவும் வைத்து கொள்கிறது.