வாழ்க்கையில் ஒரேயொரு முறை நடைபெறுகின்ற திருமணம் என்றென்றும் பசுமையான நினைவுகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அதிலும், தன் வாழ்நாளிலேயே இல்லாத அளவுக்கு அன்றைய தினம் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பம். ஆனால், ஆர்வ மிகுதியில் பெண்கள் மேற்கொள்கின்ற அதிகப்படியான மேக்கப் நடவடிக்கைகளால் எதிர்பார்த்த தோற்றம் கிடைக்காமல் போகலாம்.
இதுகுறித்து தோல் சிகிச்சை மருத்துவர் படூல் படேல் கூறுகையில், “நல்ல நாட்களில் கண்ணாடி போன்ற தெளிவான முகத்தோற்றம் வேண்டும் என்ற எண்ணமே பல சமயங்களில் ஸ்ட்ரெஸ் ஏற்பட காரணமாக அமைந்துவிடும். இதன் விளைவாக பருக்கள் ஏற்படலாம். மேக்கப் செய்தால் மட்டுமே திருமணத்தில் அனைவரின் கவனமும் நம் மீது இருக்கும் என்று நாம் கருதுவோம். எனினும், மேக்கப் கலைஞரை கொண்டு இதை கவனமாக செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
புதிதாக எதுவும் முயற்சி செய்யக் கூடாது: திருமண நாள் நெருங்கி வரும் நிலையில், நாம் இதுவரை முயற்சி செய்திராத புதிய அழகுக்கலையை முயற்சித்து பார்க்க கூடாது. ஏனெனில் அது உங்களுக்கு மட்டும் அலர்ஜியை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அவற்றை பயன்படுத்தினால் உங்கள் சருமம் வறட்சி அடையலாம். சருமத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் வகையிலான ஃபேசியல் செய்யலாம்.
மேக்கப் உடன் தூங்குவது : திருமணம் நெருங்கி வரும் நிலையில் நள்ளிரவு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களை தவிர்க்க இயலாது. எவ்வளவு தாமதமானாலும் மேக்கப்களை கலைத்துவிட்டு தான் தூங்க வேண்டும். இதைச் செய்ய தவறினால் உங்கள் சருமம் வறட்சி அடையலாம். அதேசமயம், கடுமையான அளவில் செயல்படும் மேக்கப் ரிமூவர்ஸ், ஆல்கஹாலிக் வைப்ஸ் போன்றவற்றை தவிர்க்கவும்.