‘வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளீச்சென ஆக்குவது எப்படி?’, ‘சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் போதும் சருமத்தை ஜொலி, ஜொலிக்க வைக்கலாம்’ என பல விஷயங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி இஷ்டத்துக்கு வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை முகத்தில் அள்ளி பூசுவது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இயற்கை அழகு குறிப்புகள் என்ற பெயரில் கடையில் கிடைக்கும் ரசாயன அழகு சாதன பொருட்களுக்கு மாற்றாக சமையலறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துகின்றனர். எளிதில் கிடைப்பதாலும், மலிவு விலையில் இருப்பதாலும் சமையலறை பொருட்களைக் கொண்டு க்ளென்சர்கள், ஸ்க்ரப்கள், டோனர்கள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் சமையலறை பொருட்களை வைத்து முகத்தை பராமரிப்பது நல்லது அல்ல, ஏனெனில் பல சமையலறை பொருட்கள் முகத்தில் பயன்படுத்த ஏற்றது அல்ல என தோல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் முகத்தில் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாத ஐந்து சமையலறை பொருட்கள் குறித்து இங்கு காணலாம்...
1. எலுமிச்சை பழம்: எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக்கவும், கருமையை அகற்றவும் பயன்படும் என்பதால், பலரும் அதனை நேரடியாக முகத்தில் பயன்படுத்துகின்றனர். ஆனால் எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலத் தன்மை, சருமத்தின் pH சமநிலையை சீர்குலைத்து, கடுமையான ஒவ்வாமை அதிகப்படியான வறட்சி, தோல் சிவந்து போதல் மற்றும் உரிதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே முகத்தின் மீது எலுமிச்சை பழத்தை நேரடியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, சில துளி எலுமிச்சை சாற்றை ஃபேஸ்பேக், குளியல் பொடி ஆகியவற்றில் கலந்து பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு இழைக்காமல் நல்ல பலன்களை தரும்.
2. வெள்ளை சர்க்கரை: வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஃபேஸ் ஸ்க்ரப்களில் சர்க்கரையைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அவற்றின் கூர்மையான விளிம்புகள் உணர்திறன் வாய்ந்த முக திசுக்களை சேதப்படுத்தக் கூடும். வெள்ளை சர்க்கரையுடன் வழக்கமான எக்ஸ்ஃபோலியேட்டிங் செய்வதால் தோலின் மேற்பரப்பில் நுண்ணிய வீக்கம், எரிச்சல், தோல் சிவந்து போதல், வறட்சி மற்றும் பிற தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முகப்பரு பிரச்சினைகள் உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளை உப்பு அல்லது சர்க்கரையைப் பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் அவற்றின் பயன்பாடு வடுக்கள், தோல் சிவந்து போவது, வீக்கம் ஆகிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
3. சோடா உப்பு: பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது இட்லி அல்லது கேக்கிற்கு உப்பளான பொலிவான வடிவத்தை கொடுக்கலாம், ஆனால் முகத்திற்கு பக்கவிளைவுகள் தான் பரிசாக கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். பேக்கிங் சோடாவைக் கொண்டு ஃபேஸ் வாஷ் செய்தல், ஃபேஸ் மாஸ்க் அல்லது எக்ஸ்ஃபோலியேட்டராக பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. ஏனெனில் இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி, பாக்டீரியா தொற்று, முகப்பரு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது பிக்மென்டேஷனுக்கு வழிவகுக்கும்.
4. பட்டை: இலவங்கப்பட்டை அதன் சிறந்த சுவை காரணமாக சிறந்த மசாலாவாக இருந்தாலும் இந்த வெப்பத்தை அதிகரிக்க கூடிய மசாலா பொருளை முகத்தில் நேரடியாக பூசுவது ஆபத்தானது. நீங்கள் நன்றாக கவனித்தால் எந்த வகை அழகு சாதன பொருட்களிலும் பட்டை பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருப்பதை காணலாம். மென்மையான மற்றும் கறையற்ற சருமத்திற்கு தேன், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றுடன் பட்டை போன்ற மசாலா பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம்.
5.வெஜிடபிள் ஆயில்: சருமத்தில் தாவர எண்ணெய் எனப்படும் வெஜிடபிள் ஆயிலை பயன்படுத்துவதால் பலருக்கு சாதகமான முடிவுகளே கிடைத்தாலும், சிலர் எதிர்வினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதை மறுப்பதற்கு இல்லை. கூடுதலாக சுத்திகரிக்கப்படும் தாவர எண்ணெய்கள் ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்தப்படுகிறது. உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், குளிர் அழுத்தமூட்டப்பட்ட (cold-pressed) மற்றும் ஆர்கானிக் எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.