தெளிவான, பளபளப்பான மற்றும் தழும்புகள் இல்லாத சருமத்தையே பலரும் விரும்புகிறார்கள். உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டு வர தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் கலந்த தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் இல்லாத முடிவுகளை பெற முடியும். சருமத்தை பளபளக்க செய்யும் பல இயற்கை பொருட்கள் நம்முடைய கிச்சனில் இருப்பவை மற்றும் பயன்படுத்தவும் பாதுகாப்பானவை. இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பை தர கூடிய பல கிச்சன் பொருட்கள் சருமத்தை ஈரப்பதமாக்குதல், பிரகாசமாக்குதல், மென்மையாக்குவது என பல சருமத்திற்கு ஆரோக்கியம் தர கூடிய பல பண்புகளை கொண்டுள்ளன. பளபளப்பான, களங்கமற்ற சருமத்தை உங்களுக்கு வழங்கும் முக்கிய இயற்கை பொருட்களின் பட்டியல் இங்கே..
தேன் : தேன் நமது சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதை உங்கள் DIY முறைக்குப் பிறகு ஒரு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம் அல்லது மாய்ஸ்சரைசராக சருமத்தில் மசாஜ் செய்யலாம். பப்பாளி, வாழைப்பழம் அல்லது ஃபிரெஷ்ஷான ஆரஞ்சு ஜூஸ் உடன் தேனை கலந்து ஒரு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். நீங்கள் தேனை மாய்ஸ்சரைசராக பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் சில எலுமிச்சை துளிகள் கலந்து பயன்படுத்தலாம். தொடர்ந்து தேனை பயன்படுத்தி வரும் போது உங்கள் சருமம் பளபளப்பாக மற்றும் பொலிவுடனும் இருப்பதை காணலாம்.
பச்சை பால்: பச்சை பால் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. காட்டன் பேட்-ஐ ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைப் பாலில் நனைத்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தைச் சுத்தம் செய்யவும். இந்த முறை இயற்கையான க்ளென்சராக செயல்பட்டு உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பிரகாசமாக்கும். காலை மற்றும் இரவு என எப்போது உங்களுக்கு பளபளப்பான சருமம் வேண்டுமோ அப்போது பச்சை பாலை பயன்படுத்தி பலன் பெறலாம்.
தயிர்: ஆன்டி-ஏஜிங் பண்புகளை தயிர் கொண்டுள்ளது. சருமத்திற்கு தொடர்ந்து தயிரை பயன்படுத்தி வந்தால், தழும்புகள் குறைந்து சரும, இளமையுடன் காட்சியளிக்கும். இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. சருமத்தின் நிறமும் மேம்படும். மென்மையான மற்றும் பளபளப்பான சருமம் பெற விரும்பினால் நேரடியாகவோ அல்லது ஃபேஸ் பேக்கில் கலந்தோ தயிரை பயன்படுத்தலாம்.
மஞ்சள்: மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. எனவே மஞ்சள் இயற்கை கொடுத்துள்ள ஒரு வரம் போன்றது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு பொலிவையும், பளபளப்பையும் தருகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், மெலனின் உற்பத்தியைத் தடுத்து, சருமத்தின் நிறத்தை உடனடியாக ஒளிர செய்கிறது.
அலோவேரா: சோற்றுக்கற்றாழை ஒரு அதிசய செடி ஆகும். இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிக பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் கற்றாழை ஜெல்லை விட, உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் கற்றாழையிலிருந்து ஃபிரெஷ்ஷாக எடுக்கப்படும் ஜெல் சிறப்பானதாக இருக்கும். வெயில் காரணமாக எரிச்சல் ஏற்பட்ட சருமத்தை சரி செய்வது மட்டுமல்லாமல், சரும செல்களை சரிசெய்யும் கொலாஜனையும் இது கொண்டுள்ளது. சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும் 'லிக்னின்' மற்றும் மாசு மற்றும் சூரிய பாதிப்பை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதில் உள்ளன.