க்ளென்சிங் முக்கியமானது : இரவு தூங்கும் முன்பாக நம் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். காலையிலும் அதனை செய்ய வேண்டும். இதனால், நமது சருமம் புத்துணர்ச்சி அடைகிறது மற்றும் அழுக்குகள் நீங்கி சருமத்திற்கு தூய்மையான காற்றோட்டம் கிடைக்கும். சருமத்தை சுத்தம் செய்வதால் கொப்பளம், பரு போன்றவை தடுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
ஆரோக்கியமான உணவு முறை : நம் உடலுக்கு விட்டமின்கள், மினரல்கள், புரதம், ஊட்டச்சத்துகள் ஆகிய நிறைந்த உணவு அவசியமாகும். ஏனெனில் நமது மனதையும், உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள இவை அவசியமாகும். அத்துடன் சருமமும் பளபளப்பாக காட்சியளிக்கும். சரும பாதுகாப்பிற்கு தனித்த பொருள்களை பயன்படுத்துவதைக் காட்டிலும் ஆரோக்கியமான உணவுமுறை போதுமானது.
முறையான தூக்கம் அவசியம் : நாள் ஒன்றுக்கு 7 முதல் 9 மணி நேரம் வரையில் தூங்குவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் பளபளப்பான சருமத்திற்கும் உகந்தது ஆகும். தூக்கமின்மை பிரச்சினை இருந்தால் நமது சருமம் மற்றும் முக பகுதிக்கு வரக் கூடிய ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் சருமம் பொலிவிழந்து காணப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிகமான தண்ணீர் பருகவும் : தினசரி நம் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்காவிட்டால் சருமம் கடினமானதாக மாறி விடும். நீர்ச்சத்து போதுமான அளவில் இருந்தால் சருமத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதேபோல, அகத்தின் அழகு தான் முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் தோற்றமும் அழகாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, மன ஆரோக்கியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.