உதடுகள் அழகாகவும், பட்டு போன்று இருக்கவும் பலவித வழிகளை பின்பற்றி வருவோம். அந்த வகையில், லிப் பாம்கள் உதடுகளை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த புராடக்ட். ஆனால் உதடுகளில் வெடிப்பு மற்றும் விரிசல் உள்ளவர்கள் லிப் பாம்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு லிப் ஸ்க்ரப் பயன்படுத்த வேண்டும். உதட்டில் தோல் உரிதல் என்பது தோல் பராமரிப்புக்கான ஒரு முக்கியமான செயல்முறையாகும், ஏனெனில் இது இறந்த சரும செல்களை நீக்கி, உதடுகளுக்கான மென்மையான செல்களை வழங்குகிறது. இந்தப் பதிவில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த கூடிய சில லிப் ஸ்க்ரப்களை பற்றி பார்க்கலாம்.
1. சாதாரண லிப் ஸ்க்ரப் : முதலில் சில அடிப்படைகளில் இருந்து நாம் ஆரம்பிக்கலாம். இந்த பேசிக் லிப் ஸ்க்ரப்பில் தேன் ஒரு முக்கியமான பொருள். இதில் உதட்டை ஈரப்பதமூட்டும் மூலப்பொருள் உள்ளது. அதிக நேரம் செலவிடாமல் இருக்க வேண்டுமென்றால் இது மிகவும் சிறந்த வழியாகும். இதற்கு 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து உதட்டில் மென்மையாக தடவி, சிறிது நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது நல்ல பலனை தர கூடிய முறையாகும்.
2. தேங்காய் ஸ்க்ரப் : தேங்காய் எண்ணெயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இதனுடன் சேர்க்கப்படும் தேனில் பல ஆரோக்கியப் பயன்கள் நிறைந்துள்ளது. இந்த ஸ்க்ரப்பை தயாரிக்க 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ¼ கப் தேங்காய் சர்க்கரை, வெண்ணிலா பீன் பவுடர் 1 சிட்டிகை, 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து உதட்டில் தடவலாம். இந்த ஸ்க்ரப் உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, உதட்டை மென்மையாகவும் மாற்றும்.
3. பிரவுன் சுகர் ஸ்க்ரப் : இந்த ஸ்க்ரப்பை தயாரிக்க 1 டீஸ்பூன் பிரவுன் சுகர், 1 டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், ½ டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, கலந்து கொண்டு உதட்டில் தடவவும். ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் மிக சிறந்த ஈரப்பதமூட்டிகளாகப் பயன்படுத்தபடுகின்றன. எனவே இவை உதட்டை நன்றாக பராமரிக்க உதவும்..
4. காஃபி லிப் ஸ்க்ரப் : இது மிகவும் பிரபலமான ஸ்க்ரப் முறையாக இருந்து வருகிறது. காஃபி லிப் ஸ்க்ரப் தயார் செய்ய, 1 டீஸ்பூன் நன்றாக அரைத்த காபி, 1 டீஸ்பூன் நன்றாக அரைத்த சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய், ½ டீஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்றாக கலந்து கொண்டு ஸ்க்ரப் போன்று உருவாக்கி கொள்ளவும். பிறகு இதை உதட்டில் தடவி 10-15 நிமிடத்திற்கு பிறகு எடுத்து விடவும்.இந்த ஸ்க்ரப் உங்களின் உதடுகளுக்கு ஈரப்பதமூட்டவும், ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.
5. சாக்லேட் லிப் ஸ்க்ரப் : இந்த சாக்லேட் லிப் ஸ்க்ரப்பை தயார் செய்வது மிகவும் எளிதானது மற்றும் இந்த ஸ்க்ரப் சிறந்த வாசனையும் கொண்டதாக இருக்கும். 3 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கோகோ பவுடர், 2 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட், 3/4 டீஸ்பூன் கத்தாழை சாறு, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை உதட்டில் மெதுவாக தடவவும். இதை பயன்படுத்திய சில வாரங்களிலேயே நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.