உடலில் உள்ள ரோமங்களை நீக்குவதற்கு இன்றைய காலத்தில் பல முறைகள் கையாளப்படுகின்றன. பொதுவாக பெரும்பாலானோர் பிளேடை பயன்படுத்தி ஷேவிங் செய்து கொள்கிறார். ஆனால் தற்போது மெழுகை பயன்படுத்தி ரோமங்களை நீக்கும் வேக்சிங் எனப்படும் முறை பிரபலமாகி வருகிறது. சிலர் இது சருமத்திற்கு கெடுதலானது எனவும் சிலர் பிளேடை வைத்து சேவ் செய்வது விட இந்த வேக்சிங் முறை எவ்வளவோ சிறந்தது எனவும் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் இந்த வேக்சிங் செய்வதில் உண்மையில் சில நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
மிருதுவான சருமம் : ஒருவேளை நீங்கள் ஷேவ் செய்தால் அந்த இடத்தில் இரண்டிலிருந்து நான்கு நாட்களுக்குள்ளாகவே புதிய முடிகள் வளர துவங்கிவிடும். அதனால் அந்தப் பகுதி மிகவும் கடினமாக இருக்கும். மேலும் பிளேடை கொண்டு ஷேவிங் செய்வதினால் தோலுக்கும் பாதிப்பு உண்டாக்கலாம். ஆனால் இந்த வேக்சிங் முறையில் நீங்கள் ரோமங்களை நீக்கும்போது அவை மீண்டும் வளர்வதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். மேலும் இதனை தொடர்ந்து செய்யும்போது உங்களுடைய சருமம் பிறந்த குழந்தையின் சருமத்தை போன்று மிக மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.
வெட்டு காயங்களில் இருந்து விடுதலை : சருமத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டால் எப்போதுமே ஷேவ் செய்வதை விட வேக்சிங் தான் சிறந்தது. நீங்கள் பிளேடை பயன்படுத்தி சேவ் செய்யும் போது உங்களுடைய சருமத்தில் வெட்டு காயங்கள் அவ்வபோது ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது. மேலும் அவ்வாறு வெட்டுக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பிரச்சனை உண்டாக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேலும் ஷேவ் செய்த பிறகு அந்த இடத்தில் சில சமயங்களில் எரிச்சல் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படலாம். மேலும் ஷேவ் செய்யும் போது சருமத்திற்கு மேல் வளர்ந்துள்ள ரோமம் மட்டுமே நீக்கப்படுகிறது எனவே அடிப்பகுதியில் உள்ள வேர்க்கால்களிலிருந்து முடி மீண்டும் விரைவிலேயே வளர்ந்து விடும் அசவுகரியம் உள்ளது.
ரோமத்தை முழுவதுமாக நீக்குகிறது : இந்த வேக்சிங் முறையில் ரோமம் அதன் வேர் கால்களில் இருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது. மேலும் நீண்ட நாட்களுக்கு ஷேவ் செய்யும்போது சிலருக்கு அந்தப் பகுதி மட்டும் கருமையாக மாறிவிடும். ஆனால் இந்த வேக்சிங் முறையில் இறந்த செல்கள் முழுவதுமாக நீக்கப்படுவதாலும், பிளேடு போன்ற வெட்டும் கருவிகள் தவிர்க்கபடுவதாலும் இது சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது.
மெல்லிய முடி வளர்ச்சி : நீண்ட நாட்களுக்கு இந்த வேக்சின் முறையை தொடர்ந்து செய்யும்போது முடியின் தடிமன் குறைவதை கவனிக்கலாம். காரணம் இந்த வேக்சிங் முறையில் முடியானது அதன் வேர் பகுதியில் இருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது. எனவே அதன் பின் மீண்டும் முடி வளர எடுத்துக் கொள்ளும் காலம் அதிகரிப்பதுடன் அதன் தடிமனும் குறைந்து கொண்டே வருகிறது இதனால் சருமம் பொலிவுடன் காட்சியளிப்பதோடு, சொரசொரப்பையும் குறைக்கிறது.