ஒவ்வொருவருக்கும் தனது தலைமுடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். ஆனால் அது பலருக்கும் சாத்தியமாவதில்லை. காரணம், சருமத்தைப் போலவே முடிக்கும் சரியான பராமரிப்பு தேவை. இன்றைய காலத்தில் பெண்களைப் போலவே ஆண்களும் முடி உதிர்வதை நினைத்து அதிகமாக கவலைக்கொள்கின்றனர். இதற்கு கூந்தலை பராமரிக்காதது, கூந்தலுக்கு எண்ணெய் தடவாமல் இருப்பது, பல நாட்கள் தலைக்கு குளிக்காமல் இருப்பது, முடி பொருட்களை அதிகம் பயன்படுத்துவது, தலையில் தொற்று, ஹார்மோன் சமநிலையின்மை, உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதோடு நோய் காரணமாக உட்கொள்ளும் மருந்துகள், ஏதேனும் நோய் போன்றவையும் காரணங்களாக இருக்கலாம்.
இது தவிர, தவறான உணவுப்பழக்கத்தாலும் முடி உதிர்வு பிரச்சனை தொடங்குகிறது. பெரும்பாலான ஆண்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்துவதில்லை. உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமலோ அல்லது அதிக வறுத்த, சர்க்கரை உணவுகள், ஆல்கஹால், காரமான உணவுகள், ஜங்க் ஃபுட், ஹோட்டல் உணவுகள் ஆகியவற்றை உட்கொண்டாலோ, முடியின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இப்படி உணவில் ஏற்படும் தவறுகளால் இளமையிலேயே முடி உதிரத் தொடங்குகிறது. அப்படி நீங்கள் செய்யும் தவறுகள் என்னென்ன பார்க்கலாம்...
அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளுதல் : உங்கள் தலைமுடி மாதக்கணக்கில் உதிர்ந்துகொண்டிருக்கிறது எனில், அது அதிக சர்க்கரை சாப்பிடுவதாலும் ஏற்படலாம். கேக், இனிப்புகள், சாக்லேட்கள், மிட்டாய்கள் போன்ற இனிப்புப் பொருட்களை சாப்பிடுகிறீர்கள் எனில் அது சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஒன்லி மைஹெல்த்தின் கூற்றுப்படி, இனிப்புகளை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் அவற்றை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் என்கின்றனர். சர்க்கரை கலந்த உணவுப்பொருட்களில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை அதிகமாக கலக்கப்படுகிறது. இது உடலின் ஊட்டச்சத்தை குறைக்கிறது. இது முடியை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கும்.
அதிகப்படியான சர்க்கரை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயர்த்துகிறது. இது இன்சுலினின் அதிகப்படியான உற்பத்திக்கு வழிவகுக்கிறது மற்றும் உடலின் ஆண்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கிறது. இத்தகைய ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இது தவிர, சர்க்கரைப் பொருட்களை அதிகமாக உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு, பல் பிரச்சனைகள், புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய், மனச்சோர்வு, தோல் முதுமை போன்ற பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மது அருந்துவதால் முடி உதிர்தல் : சிலருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருக்கும். குறைந்த அளவில் மது அருந்துவது அதிக தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் தினமும் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது பசியின்மை, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, தலைவலி, தூக்கமின்மை, கவனக்குறைவு, மன அழுத்தம், வீக்கம், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய் போன்ற அபாயகரமான நோய்க்கு வழிவகுக்கும். இந்த போக்கு முடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்தல் தொடங்குகிறது. குறிப்பாக ஆல்கஹால் நீரிழப்புக்கு காரணமாகிறது. இது தலைமுடி வேர்கள் வறண்டு முடி உதிர்தல் பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது.
வறுத்த, காரமான பொருட்களை சாப்பிடுவதால் முடி உதிர்வு அதிகரிக்கிறது : சிலருக்கு தினமும் வெளி உணவுகளை சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஜங்க் உணவுகள், தெருவோர உணவுகள், சாட் உணவுகள், பிரஞ்சு ஃபிரைஸ் போன்ற உணவுகள் சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். அவை சாப்பிட சுவையாக இருக்கும், ஆனால் அவற்றின் அதிகப்படியான நுகர்வு முடி உதிர்தல் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பது தெரியுமா.? வறுத்த, காரமான பொருட்களை உட்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது. இது ஸ்டீராய்டு ஹார்மோன்களைக் குறைக்கிறது. இதன் காரணமாக, முடி உதிரத் தொடங்குகிறது.
பால் பொருட்களும் முடி உதிர்வை ஏற்படுத்தும் : நிச்சயமாக, பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கான சத்தான உணவாகக் கருதப்படுகின்றன. ஆனால் அவை முடி உதிர்வை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பால் பொருட்களில் கொழுப்பு உள்ளடக்கம் உள்ளது. இது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது. உடலில் இந்த டெஸ்டோஸ்டிரோனின் அளவு அதிகரிக்கும் போது, முடி உதிர்தல் பிரச்சனை தொடங்குகிறது. உங்களுக்கு ஏற்கனவே பொடுகு, அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி போன்ற பிரச்சனைகள் இருந்தால், பால் பொருட்களை சாப்பிடுவதால் முடி உதிர்வு இன்னும் அதிகமாகும். அவற்றை குறைந்த அளவில் மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மாவுச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் முடி உதிர்கிறது : பாஸ்தா, ரொட்டி போன்ற சில மாவுச்சத்து உணவுகள் மிக அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது சர்க்கரையை உடைத்து, உபரி இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது ஆண்ட்ரோஜனின் அளவை அதிகரிக்கிறது. எனவே இது முடியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதுவும் முடி உதிர்தலுக்கு காரணம்.