

பலரும் தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொண்ட பின் ஃபிரெஷாக குளிப்பதையே விரும்புவார்கள். ஆனால் அதுவரை குளிக்காமலேயே இருப்பதா..? அதற்கு முன் குளித்தால் என்ன என்று யோசனை தோன்றியதுண்டா..?


ஆனால் உடற்பயிற்சியாளர்கள் உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும் என இரு முறையும் குளிப்பது நல்லது என்கின்றனர்.


ஆம் அதாவது உடற்பயிற்சிக்கு முன் குளிப்பதால் வியர்வை துர்நாற்றம் அதிகமாக இருக்காது. அதேபோல் குளிக்காமல் செல்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய் சருமத் துகள்களை அடைத்துக்கொள்ளும். இதனால் வியர்வை சீராக வெளியேறாது. அவ்வாறு வெளியேறினாலும் சருமத்தில் உள்ள அழுக்கும் உப்பு கலந்த வியர்வையும் சேர்ந்து சருமத்தில் அரிப்பு, அலர்ஜி என பாதிக்கச் செய்யும். உடற்பயிற்சி செய்வதற்கும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


உடற்பயிற்சிக்குப் பின் குளிப்பதன் நன்மை என்ன என்பதை பலரும் உணர்ந்திருக்கக் கூடும். அதிக களைப்பு, வியர்வை நாற்றம் செல்வது, உடலில் படும் நீரால் கிடைக்கும் புத்துணர்ச்சி ஆகியவற்றுக்கு அளவே இல்லை.


அதேசமயம் உடற்பயிற்சி முடித்த கையோடு குளிப்பது தவறு என்கின்றனர். ஆம்...உடற்பயிற்சி முடிந்ததும் உடலில் சுரக்கும் வியர்வைத் துளிகளை உடல் உறிஞ்சும் வரை காத்திருந்து பின் குளிக்க வேண்டுமாம். அதாவது உடற்பயிற்சி முடிந்ததும் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்கின்றனர்.


ஏனெனில் கலோரிகளை குறைக்க உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இதயத்தின் துடிப்பும் வேகமாக இருக்கும். எனவே உடல் வெப்பநிலையைத் தணித்து இதயத் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை ஜிம்மை விட்டு வெளியேறக் கூடாது என்கின்றனர்.