சமீபகாலமாக சேமிப்பு என்பது மிக மிக அவசியமானதாக மாறி வருகிறது. எந்த நேரத்தில் யாருக்கு என்ன நேரும் என்று உடல்நல பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்கும் சூழலில், உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், தொழில் முடக்கம் ஆகியவை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நொடி நேரத்தில் வேலையை பறிக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலே இப்படி இருக்கும் பொழுது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, பொருளாதார சிக்கலால், பணமின்மையால் முதுமையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மிகவும் கொடுமையானதாகும். எனவே பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு நீங்கள் உங்களுடைய ஓய்வுக்குப் பின்பான வாழ்க்கையை, பொருளாதார மற்றும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லாமல் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு இளம் வயதில் குறிப்பாக 30 களில் இந்தத் தவறுகளை செய்யாதீர்கள்.
அவசர தேவைக்கு சேமிப்பு : எமர்ஜென்ஸி ஃபண்டு என்று கூறப்படும் அவசர காலத்திற்கு தேவைப்படும் என்று ஒரு குறிப்பிட்ட தொகையாவது ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த அவசர காலத் தொகை என்பது குறைந்தபட்சம் மூன்று மாதம் முதல் ஆறு மாதங்களுக்கான மாதாந்திர செலவுகளுக்கு செலவுகளை ஈடுசெய்யக்கூடிய தொகையாக இருப்பது அவசியம். பணி இழப்பு, மருத்துவ செலவுகள், வீட்டுக்கான திடீர் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் ஏற்படலாம். எனவே வருமானம் இல்லாத சூழலில் கூட, குறைந்த பட்சம் கையிருப்பாக ஆறு மாதம் செலவுகளுக்கான தொகையை வைத்திருக்கும் பொழுது மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்த அவசர காலத்திற்காக சேமிக்க வைக்கும் தொகையை நீங்கள் வங்கி கணக்கில் சேமிப்பாக வைத்திருக்கலாம். முதலீடு செய்யும் பொழுது உடனடியாக அவற்றை ரொக்கமாக மாற்றுவது கடினமாக இருக்கும்.
குறைவான தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது : பயன்பட போவதில்லை, எதற்காக என்று, பலரும் காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்கு மறுக்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளை பார்க்கும் பொழுது வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறந்து போனால் அந்த குடும்பம் என்ன ஆகும் என்பதை பற்றி யோசித்துக் கூட பார்க்க முடியாத சூழலில் கோவிட் தொற்று பலரது குடும்பத்தையும் சிதைத்து உள்ளது.எனவே குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் ஆயுள் காப்பீடு தேவையான தொகைக்கு மட்டுமல்லாமல், மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, உள்ளிட்ட அடிப்படை காப்பீடுகளை கட்டாயம் வாங்க வேண்டும்.
அதிக வட்டி இருக்கும் கடன்களுக்கு குறைவாக பணம் செலுத்துவது : கிரெடிட் கார்டாக இருந்தாலும் அல்லது வங்கிகளில் வாங்கப்பட்ட இருந்த கடனாக இருந்தாலுமே, எந்த கடன்களுக்கு வட்டி அதிகமாக இருக்கிறதோ அதற்கு உங்களால் முடிந்த அளவுக்கு, அதிகமான தொகையை செலுத்தி வர வேண்டும். நீங்கள் அதிக வட்டி இருக்கும் கடன்களுக்கு குறைவான தொகையை செலுத்தி வந்தால், அதிக வட்டி காரணமாக நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகை அப்படியே நிலுவையில் இருக்கும். நீங்கள் மாதாந்திரம் செலுத்து கொண்டிருக்கும் பணம் எங்கு செல்கிறது என்று உங்களுக்கே தெரியாத அளவுக்கு நீங்கள் வட்டிக்கே பணம் கட்டிக் கொண்டிருப்பீர்கள். அதிக வட்டி இருக்கும் கடன்களை விரைவாக செலுத்தி முடித்தால் ஏகப்பட்ட பணத்தை மிச்சப்படுத்தலாம்.
தேவையே இல்லாமல் வீடுகள் வாங்குவது : அசையா சொத்தில் வீடு, மற்றும் நிலத்தில் முதலீடு செய்வது என்பது எப்பொழுதும் பாதுகாப்பானது தான். ஆனால் வீட்டுக் கடன் என்பது நீண்ட கால கடன் ஆகும். எனவே நீங்கள் தேவைக்கு மேற்பட்டு வீடு வாங்கும் சூழலில் அது உங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை அல்லது நிதி நெருக்கடியை சில ஆண்டுகளில் ஏற்படுத்தலாம்.
எதிர்காலத்துக்கு சேமிக்காமல் இருப்பது : அலுவலக ஊழியர்களுக்கு பிடிஎஃப், கிராஜூவிட்டி என்று எவ்வளவுதான் ஒரு சில சேமிப்புகள் இருந்தாலுமே, நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு எதிர்காலத்துக்கு என்று தனியாக ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் அல்லது சில மாதங்களுக்கு ஒருமுறை சேமித்து வரவேண்டும். இப்போது நீங்கள் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என்று சேமிக்கும் தொகை நீங்கள் 40 களில், 50 களில் நீங்கள் மேற்கொள்ளும் சேமிப்பை விட அதிகமான தொகையாக மாறி இருக்கும். எனவே எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டங்களை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தெரிந்துகொண்டு பாதுகாப்பான திட்டத்தில் எதிர்காலத்திற்காக கட்டாயமாக சேமிக்க வேண்டும்.
உங்களுக்காக சேமிக்காமல் குழந்தைகளுக்காக சேமிப்பது : குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து, நல்ல பள்ளிக்கூடத்தில் கல்லூரிகளில் படிக்க வைப்பது பெற்றோரின் கடமைகளில் ஒன்று. இருப்பினும் சம்பாதிக்கும் அனைத்தையும் குழந்தைகளுக்காக செலவு செய்வது மற்றும் குழந்தைகளுக்காக சேமிப்பது என்பது தவறான விஷயம். குழந்தைகளுக்கு சேமிப்பது அவசியம், அதே நேரத்தில் உங்களுக்காகவும் நீங்கள் சேமித்துக் கொள்ள வேண்டும்.