பொதுவாக மலையேற்றத்தின் தொடக்கத்தில் மிகுந்த சிரமமாக தோன்றும், இடைப்பட்ட சமயத்தில் அதை விட்டுவிடலாம் என்று கூட தோன்றும். ஆனால், இறுதியாக நீங்கள் இலக்கை அடையும்போது உங்கள் உடல் சோர்வை மறந்து, பெரும் புத்துணர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள். மலையேற்றத்திற்கு நீங்கள் புதியவர் என்றால், எந்த மலையை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் உங்களுக்கு இருந்தால், 12 கி.மீ. தொலைவுக்கு குறைவான மலைகளை தேர்வு செய்யலாம்.
சதாக்பூர் டைகர் மலை, டார்ஜிலிங் : மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த மலை. சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு மலையேற்றம் செய்தாலே அங்குள்ள சென்சால் வனவிலங்கு சரணாலயத்தை சென்றடைந்துவிட முடியும். இந்த மலையின் உச்சியில் இருந்து, உயரமான மலை சிகரங்களான மவுண்ட் எவரெஸ்ட் மற்றும் கன்ஜன்சுங்கா ஆகிய சிகரங்களைப் பார்க்க முடியும். சுமார் 5 மணி நேரத்தில் இந்த மலையில் ஏறி விடலாம்.
டிரையண்ட் மலை, எம்சி லியோட்கஞ்ச் : ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், தர்மசாலா அருகே இந்த மலை அமைந்துள்ளது. சுமார் 11 கி.மீ. தொலைவு கொண்ட இந்த மலையில் 4 முதல் 5 மணி நேரத்திற்குள்ளாக ஏறி விடலாம். வழிநெடுகிலும் பல கடைகள் இருப்பதால் உங்கள் விருப்பம் போல ஓய்வு எடுத்து, எதையேனும் சாப்பிட்டு பயணத்தை தொடரலாம். மலை உச்சியில் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம்.
செம்ப்ரா உச்சிமுனை, கேரளா: வெறும் 7 கி.மீ. தொலைவுக்கு இந்த மலையில் நீங்கள் ஒரே நாளில் ஏறி, இறங்கிவிட முடியும். வழியெங்கிலும் தேயிலை தோட்டங்கள், காஃபி தோட்டங்கள் மற்றும் மசாலா பொருள்களின் தோட்டங்கள் என அழகிய காட்சிகளை ரசித்தபடி நீங்கள் மலையேற்றம் செய்யலாம். மலையின் பாதியில், இதய வடிவிலான ஏரியை கண்டு ரசிகலாம். இங்கு தங்குவதற்கு அனுமதி கிடையாது.