அலுவலகம் செல்லும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை தான் இது. நாம் சும்மா இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில், ஏதாவது ஒரு வழியில் நம்மை தேடி பிரச்சனையும் வந்துவிடும். அந்த வகையில் நம்முடைய சக ஊழியருடனோ அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ள வேறு எவருடனும் வாக்குவாதம் ஏற்படுமாயின் அதில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதைப் பற்றிய வழிமுறை தான் இந்த கட்டுரை.
1. நிலவரத்தை எடுத்துக் கூறுங்கள் : நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று தோன்றினால் மட்டுமே நாம் எப்போதும் முதலடியே எடுத்து வைக்க வேண்டும். நம்முடைய கருத்துக்களை கூறும் போது அதனை நிரூபிக்கும் வகையில் அதற்கு வலிமை சேர்க்கும் வகையில் தரவுகளை சேகரித்துக் கொண்டு அதன் பிறகு தான் வாதத்தில் இறங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முதலில் உங்களை மறுத்து பேசியவர் கூட உங்களுடைய லாஜிக்கான பேச்சையும் செயலையும் பார்த்து உங்கள் கருத்துடன் ஒத்துப் போகக் கூடும்.
2. திமிராக பேசுவது அறவே தவிர்க்கவும் : ஒரு வாக்குவாதத்தின் போது நீங்கள் திமிர் பிடித்தவர் போலவோ அல்லது முரடரை போலவோ பேசுவது மிகப்பெரும் தவறாக முடியும். திமிராக பேசும் எவரையும் யாரும் விரும்ப மாட்டார்கள் ஒருவேளை அவர் கூறும் கருத்தில் உண்மையே இருப்பினும் அவர் பக்கம் நியாயமே இருந்தாலும் அவர் எப்போதும் தவறான ஒருவராகவே அனைவராலும் பார்க்கப்படுவார்.
3. எதிரொலியை பேச விட்டு நாம் பேச வேண்டும் : ஒரு விவாதத்தின் போதோ அல்லது வாக்குவாதத்தின் போது எப்போதும் நாம் முந்திக் கொள்ளக் கூடாது எதிரே பேசுபவரை முழுவதுமாக பேசவிட்டு அவரின் கருத்தை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட பிறகே நாம் நம்முடைய கருத்தை முன்வைக்க வேண்டும். அவ்வாறு பேசும்போது எதிராளி கூறிய கருத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி சில கேள்விகள் கேட்ட்டும் நாம் அவரை திக்குமுக்காட செய்யலாம்
4. உணர்ச்சிவசப்படாதீர்கள் : ஒரு எப்போதும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். எப்போதுமே நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்தி ஒரு நடுநிலையில் நின்று பேசும்போது மட்டுமே நம்மால் சரியான வாதத்தை வைக்க முடியும். அப்படி எவ்வளவு முயன்றும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சிறிது இடைவெளி விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பிறகு மீண்டும் நம்முடைய கருத்தை முன்வைக்கலாம்.
5. எதிராளியின் கருத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் : எப்போதுமே நம்முடைய கருத்து மட்டுமே சரியானதாக இருக்க முடியாது சில சமயங்களில் எதிரே பேசுபவரும் சில நியாயமான வாதங்களை முன்வைக்கக்கூடும் அது போன்ற சமயங்களில் அவர் கூறும் கருத்தை ஆராய்ந்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் தயங்காமல் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் இது நம்முடைய மதிப்பை ஒரு படி உயர்த்திக் காண்பிக்கும்.
6. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதீர்கள் : அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கேயும் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் நம்முடைய கருத்தை கூறிவிட்டு அந்த விஷயத்தை அப்போதே மறந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும். அவ்வாறில்லாமல் அதை மனதில் வைத்துக் கொண்டு ஒருவித காழ்ப்புணர்ச்சியோ அல்லது அவரைப் பற்றி பிறரிடம் புறம் பேசுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.