நிர்வாகத்தில் இருந்து போதிய ஒத்துழைப்பின்மை, மேல் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக ஒட்டுமொத்த வேலையையும் நாம் வெறுத்து ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்படும். சக ஊழியர்கள் மத்தியில் நிலவும் போட்டி, பொறாமை கூட நம் மனதை பாதிக்கும். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்க வேண்டிய ஹெச்.ஆர். அதிகாரிகள் சில சமயம் எதையுமே கண்டுகொள்ள மாட்டார்கள். இத்தகைய சூழலில் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
எல்லைகளை வரையறை செய்வது: அலுவலகத்தில் நமக்கான எல்லைகளை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் எந்த அளவுக்கு நெருங்கிப் பழக வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து கொள்ள வேண்டும். நம் பணித்திறன் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்ற பொறுப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உடல் நலனுக்கு முக்கியத்துவம்: என்னதான் கடுமையான பணிச்சூழலில் நாம் வேலை செய்து கொண்டிருந்தாலும், நம் உடல் நலனையும், மன நலனையும் மறந்து விடாமல் அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் உங்கள் அலுவலக பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டால், அதிலிருந்து ஆறுதல் கிடைக்கலாம்.