நாடு தழுவிய அளவில் அண்மையில் திரைக்கு வந்து பெரும் வெற்றியை குவித்த கேஜிஎஃப் பார்ட் 2 திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். கேஜிஎஃப் உலகம் என்பது மிக பயன்கரமானதாக, நம்ப முடியாத ஒன்றாக இருக்கும். பல இன்னல்களை தாண்டி அந்த உலகை கைப்பற்றுவதற்கான காரணம், அது தங்கச் சுரங்கம் என்பதுதான். அதுபோல தான் தொழில் துறையும். எந்தவொரு தொழிலும் சுலபமான ஒன்றல்ல. வெளியில் இருந்து பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படும். தொழிலில் காலடி எடுத்து வைக்கும்போது எண்ணற்ற சவால்கள் நமக்கு காத்திருக்கும்.
கேஜிஎஃப் தங்கச் சுரங்கத்தைப் போலவே பெரும் பொக்கிஷத்தை, பெரும் வெற்றியை அடைய வேண்டும் என்பது நமது கனவாக இருக்கிறது. ஆனால், நிதானமாக திட்டமிட்டு செல்லாமல், அவசர, அவசரமாக இயங்கி சில சமயங்களில் பின்னடைவை சந்திக்கிறோம். இத்தகைய சூழலில், கேஜிஎஃப் திரைப்படத்தின் கதையம்சத்தைப் பாருங்கள். ஒரு தொழில்முனைவோருக்கான கனவுகளும், முயற்சிகளும் அதில் கலந்திருக்கிறது. அந்தப் படத்தில் இருந்து சில அரிய கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.
அம்மாவுக்கு செய்து கொடுக்கும் சத்தியம் : இந்த உலகில் உள்ள எல்லா தங்கத்தையும் ஒருநாள் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன் என தாயிடம் சத்தியம் செய்கிறார் கதாநாயகன். அதுபோலத்தான், ஒரு தொழில் முனைவோராக நாம் என்ன செய்யப்போகிறோம், அதை எதற்காக செய்ய வேண்டும், அதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன என்பதை எல்லாம் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நோக்கங்களை சரியாக புரிந்து கொண்டீர்கள் என்றால் அதற்கான திட்டமிடல்களை நாமே உருவாக்கிக் கொள்வோம்.
விளையாட்டு ஆரம்பம் : கேஜிஎஃப் உலகில் கதாநாயகன் நுழைந்த பிறகு, விளையாட்டின் போக்கு மாறிவிட்டது என்பார். அதுபோல தான். நாம் எந்தவொரு தொழிலில் நுழைந்தாலும், அதற்குப் பிறகு அதன் போக்கு எதுவென்பதை தீர்மானிப்பவராக நாம் தான் இருக்க வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன்பாக தைரியமும், தன்னம்பிக்கையும் தேவை. நம் இலக்குகளை அடைவதற்கு அது உதவிகரமாக இருக்கும்.
நீங்கள் தலைமைத்துவத்துடன் இருக்க வேண்டும் : ஆயிரம் நம்மை தலைவனாக ஏற்றுக் கொண்டு, அந்த தைரியத்தோடு நம் பின்னால் நின்றால் நாம் உலகையே வெல்ல முடியும் என்பது கேஜிஎஃப் சொல்லும் செய்தி ஆகும். அதுபோலத்தான் தொழிலும். இங்கு வாடிக்கையாளர்கள் தான் நமது சொத்து. உங்கள் வாடிக்கையாளர் யார் என்பதை நீங்கள் கண்டறியாவிட்டால் உங்களால் வெற்றி அடைய முடியாது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நீங்கள் பெற்று விட்டீர்கள் என்றால், தொழிலில் உங்களை யாராலும் வெல்ல முடியாது.
இறுதியில் யார் தோற்கிறார் என்பதே முக்கியம் : எந்த ஒரு சண்டையிலும் முதலில் யார் அடிக்கிறார்கள் என்பதைக் காட்டிலும், முதலில் யார் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்பதே முக்கியமானது. அதுபோல தான் தொழிலும், சக போட்டியாளர்களுக்கு மத்தியில் நீங்கள் முதலில் சரிவை சந்திக்கக் கூடும். ஆனால், இறுதி வரை யார் தாக்குப் பிடித்து நிற்கிறார்கள் என்பதே முக்கியமானது.