உடல் பருமனை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலரது மனதிலும் நிறைந்திருக்கும். எடை குறைப்பது ஒன்றும் மிகுந்த கடினமான காரியம் அல்ல. நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டீர்கள் என்றால் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைப்பதற்கான பொருட்கள் பல நமது சமையல் அறையிலேயே உள்ளன. மிகுந்த கவனத்துடனும், பொறுமையாகவும் இந்த நடைமுறைகளை பின்பற்றினால் போதும்.
சமையலில் பயன்படுத்தப்படும் மூலிகை, மசாலா பொருட்கள் மற்றும் சிட்ரிக் பழங்கள் ஆகியவற்றில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆற்றல் நிறைந்துள்ளது. இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு உடல் நல பலன்களையும் உங்களுக்கு வழங்கும். உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
ஜீரக தண்ணீர் : அனைவர் வீட்டு சமையல் அறையிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் ஓர் மசாலா பொருள் இது. இது உங்கள் உணவுக்கு மனமூட்டும். அதுமட்டுமல்லாமல் எடை குறைப்புக்கு உதவும். மிகக் குறைவான கலோரிகளை கொண்டது. சிறிது சீரகம் மற்றும் மிகச் சிறிய லவங்கப்படை ஆகிய இரண்டையும் எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த தண்ணீரை 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதன் பின்னர் வடிகட்டி குடுக்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் : அதிகாலையில் ஒவ்வொரு நாளும் ஆப்பிள் சைடர் வினிகர் அருந்தி வந்தால் டைப் 2 நீரிழிவு நோய், எக்ஸிமா மற்றும் அதிக கொழுப்பு ஆகிய பிரச்சினைகளை கட்டுப்படுத்தும். உங்கள் தொப்பையை குறைப்பதில் ஆப்பிள் சைடர் வினிகர் முக்கிய பங்காற்றுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும். பசியை குறைத்து, ஜீரணத்தை தாமதப்படுத்தும். ஒரு டீ ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் எடுத்து, அதனை சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
கருஞ்சீரகம் : இதில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் இரும்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்கள் உடலில் பசியை கட்டுப்படுத்தக் கூடிய ஜீன்களின் செயல்பாட்டை இது ஊக்குவிக்கும். இது மட்டுமல்லாமல், எடை குறைப்பை வேகப்படுத்தும். நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு உகந்தது. கருஞ்சீரகத்தை அரைத்து தூளாக்கி, சூடான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
எலுமிச்சை சாறு, பிளாக் சால்ட் : சூடான நீரில் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை பிளாக் சால்ட் ஆகியவற்றை கலந்து குடிப்பதன் மூலமாக உங்கள் தொப்பையை வெகுவாக குறைக்கலாம். விட்டமின் சி சத்து நிறைந்தது. குறைவான கலோரிகளை உடையது. எலுமிச்சை சாறு உங்கள் வயிற்றில் முழுமை அடைந்த உணர்வை ஏற்படுத்துவதால் பசி கட்டுக்குள் வருகிறது. எலுமிச்சை சாறை அளவோடு எடுத்துக் கொண்டால் அசிடிட்டி, சரும நோய்கள் போன்றவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.