நீரிழிவுக்கு வெண்டைக்காய் : சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை மிகுதியாக சாப்பிட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்ற சூழலில், வெண்டைக்காய் சாப்பிட்டால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் வெண்டைக்காய் சூப் அருந்துவதன் மூலமாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
கிளைசமிக் இண்டெக்ஸ் : நாடு முழுவதிலும், குறிப்பாக தமிழகத்தில் பரவலான மக்கள் சாப்பிடக் கூடிய காய்கறியாக வெண்டைக்காய் இருக்கிறது. இது குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட காய்கறி ஆகும். ஒரு உணவு எந்த அளவுக்கு ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கிறது என்பதை பொறுத்து அதன் கிளைசமிக் இண்டெக்ஸ் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுப் பொருள் நம் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
நார்ச்சத்து : வெண்டைக்காயில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையா நார்ச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. நாம் சாப்பிட்ட பிறகு, இந்த நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு பிறகு உடையத் தொடங்கும். நீண்ட நேரம் கழித்து உடைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெது, மெதுவாக கலக்கும். இதனால், நமது ரத்த சர்க்கரை அளவு சட்டென்று உயர்ந்து விடாமல் சீரான அளவில் இருக்கும்.
நார்ச்சத்து மிகுந்த உணவை நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது உங்கள் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும் மற்றும் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. ஆகவே, நீங்கள் கூடுதலான உணவு மற்றும் ஸ்நாக்ஸ்களை தவிர்க்க முடியும். இதனால், உடல் பருமன் பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, சர்க்கரையை குறைக்கும் இன்சுலின் சுரப்பு சீரான அளவில் இருக்கும்.