சுட்டெரிக்கும் கோடை காலத்தில் ஏசி இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. கண்டிப்பாக இன்றைக்கும் பலரது வீடுகளில் ஏசி பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள். குறைந்தபட்சம் வீட்டில் ஏசி இல்லை என்றாலும், நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் ஏசி இருக்கும். ஏசி என்பது ஆடம்பர வசதி என்பதை தாண்டி தற்போது அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. வெப்ப அலை வீசும் நாட்களில் பகலிலும், இரவிலும் ஏசி பயன்படுத்தினால் தான் நாம் அறைகளுக்குள் இருக்க முடியும் என்ற நிலை. எல்லாம் சரிதான், ஆனால் நீண்ட நேரத்திற்கு ஏசியில் இருப்பது நல்லதா? என்றால் கட்டாயம் இல்லை தான். நம் உடலுக்கு மிக முக்கியமான பிரச்சினைகள் ஏசி பயன்பாட்டினால் வருகின்றன.
வறட்சியான கண்கள் :ஏசியில் இருப்பதால் உங்கள் கண்கள் வறட்சி அடையலாம். ஏசி மட்டுமல்லாமல், மொபைல், டிவி போன்ற பிற எலெக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு காரணமாகவும் நமது கண்கள் வறட்சி அடைகின்றன. கண்களுக்குப் போதிய ஈரப்பசை கிடைக்காத காரணத்தால் வறட்சி ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை ஏற்கனவே உங்களுக்கு இருக்கிறது என்றால் ஏசியில் அமர்வதால் அந்தப் பிரச்சினை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்.
வறட்சியான சருமம் மற்றும் முடி பாதிப்பு: நம் சருமத்திற்கும், தலைமுடிக்கும் நிறைய பாதிப்புகளை ஏசி உண்டாக்கும். என்னதான் ஏசி குளுமையாக இருந்தாலும் நம் சருமத்திற்கும், முடிக்கும் போதிய ஈரப்பசை கிடைக்காது. இதனால், அவை வறட்சி கண்டு பாதிப்பு அடையும். முன்கூட்டியே வயது முதிர்வு ஏற்படுவது, தேவையற்ற சரும பாதிப்புகள் போன்றவை ஏற்படலாம். தலைமுடி பரட்டை போல ஆகும். மிக அதிகமாக முடி உதிரக் கூடும்.
நீர்ச்சத்து இழப்பு : ஏசியால் விளையும் நன்மையைக் காட்டிலும் தீமைகளே அதிகம். நீங்கள் இருக்கும் அறையில் உள்ள ஈரப்பதம் அனைத்தையும் ஏசி உறிஞ்சிவிடும். இதனால், நம் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதோடு, வறட்சியான நிலையை நீங்கள் உணரக் கூடும். ஆகவே, நீங்கள் ஏசியில் அமரும் பட்சத்தில் அவ்வபோது சிறிய அளவில் தண்ணீர் பருகுவதை வாடிக்கையாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஆஸ்த்துமா மற்றும் அலர்ஜி: ஆஸ்த்துமா மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் ஏசியில் இருந்தால், அந்தப் பிரச்சினைகள் இன்னும் கூடுதலாகிவிடும். குறிப்பாக, ஏசியை நீங்கள் முறையாக சுத்தம் செய்யவில்லை என்றால் அலர்ஜி மற்றும் ஆஸ்த்துமா பிரச்சினை அதிகரித்துவிடும். ஆகவே, இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் ஏசி பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது.