2021ம் ஆண்டை வரவேற்க உலகம் முழுவதும் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். புதிய வருட பிறப்பு என்பதால் பலரும் குடும்பத்தோடு புத்தாண்டு நாளில் இருப்பார்கள். அன்றைய தினமும் எப்போதும்போல் டிவி பார்ப்பது, அரட்டை அடிப்பது என பொழுதைக் கழிப்பார்கள். இது கொண்டாட்டமான நாள் என்பதை வேறுபடுத்திக்காட்டாது. உங்களின் புத்தாண்டு நாள் சிறப்பாக அமையவேண்டுமென்றால் புதிதாக ஏதாவதொன்றை செய்ய வேண்டும். அந்தவகையில் உங்கள் குடும்பத்துடன் விளையாடும் 5 விளையாட்டுகளை இங்கே பார்க்கலாம்.
பிங்கோ பிக்சனரி; (Bingo and Pictionary) : இது படம் வரைந்து கண்டுபிடிக்கும் ஒரு சிம்பிளான விளையாட்டுதான். இதற்காக நீங்கள் முன் தயாரிப்பெல்லாம் செய்யத்தேவையில்லை. வீட்டில் இருக்கும் உறவினர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வட்டமாக அமர்ந்துகொள்ள வேண்டும். ஒரு வெள்ளைத் தாளை எடுத்து அதில் ஒருவர் சொல்ல நினைக்கும் வார்த்தையை படமாக வரைய வேண்டும். அதனை மற்றவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். நிச்சயமாக இந்த விளையாட்டு உங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுக்கும்.
20 கேள்விகள் : இது மிகவும் பிரபலமான விளையாட்டு. இந்த விளையாட்டில், ஒருவர் குறிப்பிட்ட பொருளையோ, படத்தையோ, அல்லது ஏதேனும் ஒன்றை நினைத்துக்கொள்வார். மற்றொருவர் சரியான கேள்விகளை எழுப்பி, அவர் நினைத்திருக்கும் பொருளை யூகித்து பதில் சொல்ல வேண்டும். அதிகபட்சம் 20 கேள்விகளை கேட்கலாம். மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கும் விளையாட்டு.
ஆக்சன் விளையாட்டு; (New Year charades) : காமெடியான சில டயலாக் அல்லது பெயர்களை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி ஒரு கிண்ணத்தில் போட வேண்டும். போட்டியில் உள்ள நபர்கள் வரிசையாக சென்று கிண்ணத்தில் தங்களுக்கு வரும் பெயர்களை, ஆக்சன் வடிவில் எடுத்துரைக்க வேண்டும். அதனை, அந்த நபர் சார்ந்த அணி சரியாக கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எதிரணியினர் சொல்லி வாகை சூடலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் இருந்தால் போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும்
இரண்டு உண்மைகளும் ஒரு பொய்யும்; (Two Truths and a Lie) : உறவினர்களுடன் இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இந்த விளையாட்டு உங்களை மிகவும் மகிழ்விக்கும். அதுமட்டுமல்லாது உங்களின் பிணைப்பையும் அதிகப்படுத்தும் ஒரு விளையாட்டாக கூட இருக்கும். அதாவது, போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் வட்ட வடிவில் குழுவாக அமர்ந்து கொள்ள வேண்டும். அதில், ஒருவர் எழுந்து ஒருவரைப் பற்றி சில கருத்துக்களை கூற வேண்டும். மற்றவர்கள் அவர் கூறியதில் எது உண்மை, எது பொய் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
புதையல் வேட்டை; (Treasure hunt) : இந்த விளையாட்டு உங்களை நிச்சயம் குதூகலப்படுத்தும். புதையல் வேட்டை என்பது வீட்டில் உள்ள ஒரு பொருளை எங்கேயாவது ஒளித்து வைத்து விட வேண்டும். மற்றவர்கள் அவர் ஒளித்து வைத்த பொருளை சரியாக தேடிச்சென்று கண்டுபிடிக்க வேண்டும். பொருளை தேடிக் கண்டுபிடிப்பது சுவாரஸ்யமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.