

டிஜிட்டல் யுகத்தில் செல்போன்களின் மீதான போதை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சொல்லப்போனால், செல்போனுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை. நொடிக்கு ஒருமுறை நம்மை அறியாமலேயே செல்போன்களை நம் கண் பார்த்துவிடுகிறது. செல்போன்களுக்கு அடிமையாக இருப்பதும் ஒருவகையான போதை பழக்கம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இதற்கு மிக முக்கிய காரணம் கவனச் சிதறல். நீங்கள் ஒன்றை தேடுவதற்காக செல்போனை எடுப்பீர்கள், ஆனால் அங்கிருக்கும் ஒரு தகவல் உங்களை வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும். எதற்காக செல்போனை எடுத்தீர்கள் என்பதைக்கூட ஓர் இடத்தில் மறந்து விடுவீர்கள். ஒருமணி நேரம் அல்லது அரைமணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் பழைய தகவலை தேட முற்படுவீர்கள். இதுவும் செல்போன் போதைக்கான அறிகுறி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செல்போன்களின் மீதான போதையில் இருந்து விடுபட உங்களுக்கு சூப்பரான 5 வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.


நோட்டிபிக்கேசனை ஆப் செய்யுங்கள் : உங்களின் கவனச் சிதறலுக்கு மிக முக்கிய காரணம் நோட்டிபிக்கேஷன்ஸ். நீங்கள் ஏதாவது ஒரு பணியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது, செல்போனில் பீப் ஒலியுடன் வரும் நோட்டிபிக்கேஷன் உங்களின் கவனத்தை சிதறடிக்கும். நீங்களும் என்ன வந்திருக்கிறது என்று அதனை பார்ப்பீர்கள். இதனால், மணிக்கணக்கில் செல்போனில் நேரத்தை செலவிடுவீர்கள் என்பதால், முதலில் அந்த நோட்டிபிக்கேசனை ஆப் செய்யுங்கள். உங்கள் மனம் அலைப்பாயாது.


செயலிகளை பயன்படுத்துங்கள் : செல்போன் போதையில் இருந்து விடுபடுவதற்கும், செயலியை பயன்படுத்த சொல்வதற்கும் முரண்பாடாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் நினைப்பது போல் அல்ல. செல்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள், எந்த செயலியில் நீங்கள் அதிகமான நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதை கணக்கிடும் செயலிகளை நீங்கள் பயன்படுத்தலாம். இதன்மூலம் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். இதன்மூலம் உங்களின் பொன்னான நேரத்தை எவ்வளவு உபயோகமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும், செல்போனை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கும் அவை உதவியாக இருக்கும்.


ஓய்வு நேரத்தில் பயன்படுத்தாதீர்கள் : ஓய்வு நேரம் என்பதை செல்போன் பயன்படுத்துவதற்கான நேரம் என பெரும்பாலானோர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் உங்களின் மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதனால், ஓய்வு நேரங்களில் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செல்போனை பயன்படுத்தாமல் எவ்வளவு நேரம் உங்களால் இருக்க முடிகிறது என்பதை சோதித்து பாருங்கள். பின்னர், அது உங்களுக்கு பழகி ஓய்வு நேரத்தில் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க பழகிக்கொள்வீர்கள்.


படுக்கையில் செல்போன் வேண்டாம் : பெரும்பாலானோர் செல்போனை படுக்கையிலேயே வைத்திருப்பார்கள். அதனை முதலில் கைவிட வேண்டும். படுகைக்கு அருகில் சார்ஜ் செட்டிங் இருந்தால், அதில் செல்போனை சார்ஜ் செய்யாதீர்கள். வேறொரு இடத்தில் செல்போனை சார்ஜ் போடுங்கள். சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனை பயன்படுத்துவதும் போதைக்கான அறிகுறி. முடிந்தளவு உங்களை விட்டு செல்போன் தொலைதூரத்தில் இருப்பதை உறுதி செய்யுங்கள். செல்போன் பற்றிய சிந்தனைகளை மனதில் இருந்து அகற்றுங்கள்.


தேவையற்ற செயலிகளை நீக்குங்கள் : உங்கள் செல்போனில் இருக்கும் தேவையற்ற செயலிகளை நீக்குங்கள். செல்போன் போதையில் இருந்து விடுபட நினைக்கும் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை இதுதான். ஏனென்றால் அவை உங்களின் கவனத்தை தொடர்ந்து சிதறடித்துக் கொண்டே இருக்கும். இதனால், உங்களின் பொன்னான நேரத்தை தேவையில்லாமல் வீண்டித்துக் கொண்டிருப்பீர்கள். ஒருவேளை உங்களுக்கு அந்த செயலி தேவை என்றால், முகப்பு பக்கத்தில் இருந்து எடுத்து திரையின் மூன்றாவது, நான்காவது பக்கத்திற்கு நகர்த்தி விடுங்கள். இந்த வழிமுறைகளை எல்லாம் கடைபிடித்தீர்கள் என்றால் நிச்சயம் செல்போன் போதையில் இருந்து உங்களால் விடுபட முடியும்.